அதிகரிக்கும் சைபர் கிரைம்.. ஜூலையில் மட்டும் ரூ. 1.65 கோடி மீட்பு – சென்னை காவல் துறை தகவல்..
Cyber Crime Complaints: தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 2025, ஜூலை மாதம் மட்டும் சுமார் ரூ. 1.65 கோடி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய புகார்களுக்கு 1930 எண்ணை தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 5, 2025: சென்னை பெருநகர சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் மூலமாக கடந்த 2025 ஜூலை மாதத்தில் மட்டும் 191 சைபர் புகார்கள் பெறப்பட்டதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ரூபாய் ஒரு கோடியே 65 லட்சத்து 30 ஆயிரத்து 234 மீட்கப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 1930 என்ற அவசர அழைப்பு மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை மீட்டு தர உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ” சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் மூலமாக பல்வேறு சைபர் குற்ற நிகழ்வுகளில் பாதிக்கப்படும் பொதுமக்களின் புகார்களை 1930 என்ற அவசர அழைப்பு மூலமாக அல்லது நேரடியாக வழங்கப்படும் புகார்களை பெற்று துரிதமாக நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம் பணம் இழந்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் பணத்தை மீட்டு தர சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களின் இணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மூலம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சைபர் கிரைம் புகார் மூலம் 1.65 கோடி ரூபாய் மீட்பு:
சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் அதிகாரிகள் திறம்பட துரிதமாக விசாரணை மேற்கொண்டு கடந்த ஜுலை மாதம் (01.07.2025 முதல் 31.07.2025 வரை) சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தாக்கலான 35 புகார் மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.90,67,507/- மீட்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட 18 புகார் மனுக்களில் ரூ.13,43,467/- மீட்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிங்கத்துடன் போட்டோ எடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி – வைரலாகும் வீடியோ
அதேபோல், மேற்கு மண்டலத்தில் பெறப்பட்ட 32 புகார் மனுக்களில் ரூ.15,71,276/- மீட்கப்பட்டும், தெற்கு மண்டலத்தில் பெறப்பட்ட 58 புகார் மனுக்களில் ரூ.23,70,292/- மீட்கப்பட்டும், கிழக்கு மண்டலத்தில் பெறப்பட்ட 48 மனுக்களில் ரூ.21,77,692/-மீட்கப்பட்டும் மொத்தமாக 191 புகார்தாரர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மொத்தம் பணம் ரூ. 1,65,30,234/- (ரூ.பாய் ஒரு கோடியே அறுபத்தைந்து இலட்சத்து முப்பதாயிரத்து, இருநூற்று முப்பத்து நான்கு) மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கர்ப்பிணியின் கன்னத்தில் அறைந்த மருத்துவர் – குழந்தை மரணம்…. உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு
சைபர் கிரைம் புகார்களுக்கு தொடர்பு எண்:
மேலும் நடப்பு 2025ம் ஆண்டு 31.07.2025 வரை ரூ.18,08,61,565/- மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் இணைய வழி பண பரிமாற்றம் செய்யும்பொழுது மிகுந்த விழிப்புணர்வுடனும், அனுப்பும் தொடர்புகளில் உரிய நம்பகத்தன்மை அறிந்து பயன்படுத்திடவும், உரிய புகார்களுக்கு 1930 எண்ணை தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் சென்னை பெருநகர காவல் துறை மூலம் கேட்டு கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.