கர்ப்பிணியின் கன்னத்தில் அறைந்த மருத்துவர் – குழந்தை மரணம்…. உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு
Shocking Hospital Negligence : மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் வாட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தால் குழந்தை இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் பிரசவத்தின் போது பெண்ணின் கன்னத்தில் மருத்துவர் அறைந்ததாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் (Maharastra) வாஷிம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வலியுடன் படுத்திருந்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மருத்துவம் பார்க்காமல் நிராகரித்ததன் காரணமாக, அந்தக் குழந்தை பிறந்த உடனே உயிரிழந்தது எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 2 2025 அன்று, வாஷிம் மாவட்டம் பல்சாகேட் என்ற ஊரைச் சேர்ந்த சிவானி வைபவ் காவஹனே என்ற கர்ப்பிணி பெண் (Pregnant)அதிகாலை 3 மணிக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதல்கட்ட பரிசோதனையில் அனைத்தும் நார்மலாக இருந்திருக்கிறது. இதனையடுத்து சிவானிக்கு காலை 10 மணிக்குள் பிரசவம் நடைபெறும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மருத்துவர்களால் கைவிடப்பட்ட கர்ப்பிணி பெண்
இந்த நிலையில், அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை எந்தவொரு மருத்துவரும், நர்ஸும் கூட சிவானியை பரிசோதிக்கவில்லை. சிவானி வலியால் அலறித் துடித்தபோதும் மருத்துவர்கள் யாரும் அவரை வந்து பரிசோதிக்கவில்லை என அவரது குடும்பத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மாலை 5.30 மணிக்கு தான் பிரசவம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிறந்த குழந்தைக்கு இதயத் துடிப்பு இல்லை எனக் கூறியுள்ளனர். சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தியதே இதற்கு காரணம் என சிவானியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் பிரசவத்தின் போது மருத்துவர் சிவானியின் கன்னத்தில் அறைந்ததாகவும், வயிற்றை வலுக்கட்டாயமாக அழுத்தியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தகுதிவாய்ந்த ஊழியர்களால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க : சிறுமியுடன் எடுத்த செல்ஃபியை ஸ்டேட்டசில் வைத்த இளைஞர்.. கொலைவெறி தாக்குதல் நடத்திய சிறுமியின் அண்ணன்!




மருத்துவர்கள் மீது நடவடிக்கை உறவினர்கள் கோரிக்கை
சம்பவத்திற்குப் பிறகு, சிவானியின் மாமியார் லதா காவஹனே கூறியதாவது, மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் கவனக்குறைவினால் தான் என் பேத்தி உயிரிழந்துள்ளார். எங்கள் மருமகள் ஒருநாள் முழுவதும் வலியில் துடித்தபோதும் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. காலை முதல் மாலை வரை நாங்கள் பலமுறை உதவிக்கேட்டும், எவரும் செவிசாய்க்கவில்லை. எங்கள் குழந்தை உயிரிழந்ததற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையும் படிக்க : ஜிம்மில் திடீர் மாரடைப்பு.. சுருண்ட விழுந்து உயிரிழந்த நபர்.. அதிர்ச்சி வீடியோ
மேலும், சம்பவம் குறித்து உறவினர்கள், மருத்துவர்களின் அலட்சியமே குழந்தை உயிரிழந்ததற்கு காரணம். எனவே மருத்துவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து சமூக வலைதளங்களில், இந்த செய்தி மகாராஷ்டிரா அரசின் மருத்துவ சேவையின் செயல்பாடுகள் குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.