தமிழ்நாட்டில் வெட்டிக்கூட்டம் சுற்றுகிறது… அதனால் யாருக்கும் பலனில்லை… உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
DMK Youth Wing Meet: விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் மாநாட்டில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் வெட்டிக்கூட்டம் சுற்றுவதாகவும், அதனால் எந்த பயனும் இல்லை என்றும் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின்
விருதுநகர், பிப்ரவரி 7 : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சியில் பிப்ரவரி 7, 2026 அன்று திமுக இளைஞரணி தென் மண்டல மாநாட்டு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் ஒரு வெட்டிக் கூட்டம் சுற்றுவதாகவும் அதனால் எந்த பயனும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இது தவெகவை மறைமுகமாக விமர்சிப்பது போல உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
‘தமிழ்நாட்டின் வெட்டிக்கூட்டத்தால் யாருக்கும் பயனில்லை’
இந்த நிலையில் மாநாட்டில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், திமுகவின் இளைஞரணி கட்சி பணிகளிலும், மக்கள் சேவையிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கூட்டம் எந்த வித கொள்கையும் இல்லாமல் வெற்று சத்தம் போடுகிறது. அந்த கூட்டத்தால் யாருக்கும் பயனில்லை என்றார்.
இதையும் படிக்க : மத்திய பட்ஜெட்.. பாஜகவை கண்டித்து பிப்.12 திமுக, கூட்டணிக் கட்சிகள் போராட்டம் அறிவிப்பு!
மேலும் பேசிய அவர், சங்கிகள் எப்போதும் திமுக மீது காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறார்கள். இதுவரை தமிழ்நாட்டை மதிக்காத பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் வருவதால் இப்போது அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளார். கடலுக்குள் தியானம் செய்வார். இரட்டை எஞ்சின் அரசு வேண்டும் என அவர் பேசுகிறார். ஆனால், திமுகவின் திராவிட மாடல் ஒற்றை எஞ்சின் ஆட்சியிலேயே தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை முழுமையாக வாசிப்பதற்குள், அது சிறந்த பட்ஜெட் என எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கிறார். இதுவரை அதிமுக, பாஜகவின் ஒரு கிளையாக இருந்தது. தற்போது அது பாஜகவின் ஒரு இலையாகிவிட்டது. அதிமுக பாஜகவுக்கு அடிமையாக மாறிவிட்டது என்றார்.
இதையும் படிக்க : பிப்.17ல் தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் தாக்கல்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
மேலும், பத்து முறை தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமியும், முழுமையான தோல்வியடைந்த மோடியும் கூட்டணி அமைத்தால், தமிழ்நாட்டில் அவர்களால் காலடி எடுத்து வைக்க முடியாது. திமுக எதற்கும் அஞ்சாது. மக்களை நேரடியாக சந்திக்கத் தயார். எங்கள் தலைவர் வீட்டில் தூங்கியபடி மாதம் ஒருமுறை மட்டும் வெளியே வந்து டெல்லியில் சுற்றுபவர் கிடையாது. தமிழ்நாடு எப்போதும் டெல்லியின் கட்டுப்பாட்டிற்கு வெளியில் தான் என்பது எங்கள் தலைவரின் நிலைப்பாடு என்றார்.