இதெல்லாம் சரியா? தவெக எம்எல்ஏவின் குழந்தையை கவனிக்கும் பெண் அதிகாரிகள்.. பல்லவி கண்ணில் படாமல் தெறித்து ஓடும் அலுவலர்கள்?
TVK MLA Pallavi Child : சென்னை திருவிக நகர் தொகுதி தவெக எம்எல்ஏ பல்லவி தனது குழந்தையை அரசு அதிகாரிகளிடம் கொடுத்து கவனிக்குமாறு கூறுவதாக அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதற்கு, முதல்வர் விஜய் அறிவுரை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை திரு. வி. க. நகர் தொகுதி தவெக எம்எல்ஏவாக இருந்து வருபவர் பல்லவி. இவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இவர் பங்கேற்கும் அரசு மற்றும் நிகழ்ச்சிகளில் தன் குழந்தையுடன் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகளிலும் தனது கைக்குழந்தையுடன் பங்கேற்று இருந்தார். மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் வேனின் அருகே தனது குழந்தையுடன் வந்த பல்லவி எம்எல்ஏவை விஜய் கண்டித்து இருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், பல்லவி எம்எல்ஏ அரசு ஆய்வு கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு செல்லும்போது தனது குழந்தையை கவனிக்கும் பொறுப்பை அங்கு இருக்கும் பெண் அரசு ஊழியர்களிடம் ஒப்படைத்து வருவதாக கூறப்படுகிறது.
பல்லவி எம்எல்ஏவின் குழந்தையை கவனித்த துணை தாசில்தார்கள்
அதன்படி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சென்னை வளர்ச்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக திரு. வி. க. நகர் எம். எல்.ஏ. பல்லவி தனது கைக்குழந்தையுடன் வந்திருந்தார். அப்போது, அவர் தனது குழந்தையை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 2 பெண் துணை தாசில்தார்களிடமும், ஒரு பெண் அலுவலரிடமும் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றார். அவர்களும் எம்எல்ஏ பேச்சை மீற முடியாமல் குழந்தையை கவனித்துக் கொண்டனர்.
மேலும் படிக்க: கவுன்சிலருக்கு மட்டுமில்ல எனக்கே இந்த நிலை தான்.. சென்னை மாநகராட்சியை கலைத்து விடலாம்.. கூட்டத்தில் கொந்தளித்த மேயர் ஆர். பிரியா!




பல்லவி எம்எல்ஏ கண்ணில் படாமல் தெரித்து ஓடும் அலுவலர்கள்
இதனால், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பல்லவி எம்எல்ஏ கண் எதிரில் படுவதற்கு பெண் ஊழியர்கள் அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. மேலும், எம்எல்ஏவின் இத்தகைய செயல் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை வீட்டில் தனியாக விட்டு வர முடியாத நிலை இருந்தால் ஒரு உதவியாளரை நியமனம் செய்து கொள்ளலாம். அதை விடுத்து விட்டு, அரசு ஊழியர்களிடம் குழந்தையை கவனிக்குமாறு கூறுவது சரியான செயல் அல்ல என்று அலுவலர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனராம்.
முதல்வர் தான் அறிவுரை வழங்க வேண்டும்
இதனிடையே, தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் எம். பி. கார்த்திக் சிதம்பரம், பல்லவி எம்எல்ஏவின் செயலுக்கு வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்து இருந்தார். இதில், பணி புரியும் பெற்றோருக்கு தேவையான குழந்தை பராமரிப்பு மையம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்டவை உள்ளன. அதே வேளையில் பொது நிகழ்ச்சிகளுக்கு பல்லவி எம்எல்ஏ தனது கைக்குழந்தையுடன் வருவது அரசியல் விளம்பரம் மற்றும் கவனத்தை ஈர்க்கும் செயல் ஆகும். இவருக்கு முதல்வர் விஜய் அறிவுரை வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல்.. நா வரேன் போட்டிக்கு.. சீமான் மாஸ் அறிவிப்பு!