சென்னை பிராட்வே செல்லப்பிராணிகள் சந்தைக்கு தடை! மீறுவோர் மீது கடும் நடவடிக்கை – மாநகராட்சி அதிரடி..
சென்னை பிராட்வே அருகே நடக்கும் செல்லப்பிராணிகள் சந்தை தொடர்பாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் அடிப்படையில், பிராட்வே மஸ்கான் சாவடி சந்தைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் செல்லப்பிராணிகள் விற்பனை செய்வதற்குத் தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 29, 2026: சென்னை பிராட்வே, மண்ணடி பகுதியில் உள்ள மஸ்கான் சாவடி கோழி மார்க்கெட் பகுதியில், பல ஆண்டுகளாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் செல்லப்பிராணிகள் விற்பனைச் சந்தை நடைபெற்று வந்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இந்தச் சந்தைக்கு வருகை தந்து தங்களுக்குத் தேவையான செல்லப்பிராணிகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்தச் சந்தையில் நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள், பல்வேறு வகையான பறவைகள், அலங்கார மீன்கள், வாத்துகள், ஹேம்ஸ்டர்கள், முயல்கள் உள்ளிட்ட பல்வேறு செல்லப்பிராணிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. மேலும், அரிய வகை செல்லப்பிராணிகளும் இங்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தச் சந்தை செல்லப்பிராணிகளை வாங்க விரும்புவோர் மத்தியில் பிரபலமாக இருந்து வந்தது.
மேலும் படிக்க: செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்.. நள்ளிரவில் இரு முறை தட்டப்பட்ட கதவு.. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை!
போக்குவரத்து நெரிசல் – பொதுமக்கள் புகார்
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை நடைபெறும் இந்தச் சந்தைக்கு ஏராளமானோர் வருவதால், பிராட்வே மற்றும் மண்ணடி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. மேலும், சந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வந்தன.
இதற்கிடையே, சந்தையில் விற்பனை செய்யப்படும் செல்லப்பிராணிகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்றும், அவற்றின் நலன், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் மீறப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
செல்லப்பிராணிகள் விற்பனைக்கு மாநகராட்சி தடை
தொடர்ந்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் அடிப்படையில், பிராட்வே மஸ்கான் சாவடி சந்தைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் செல்லப்பிராணிகள் விற்பனை செய்வதற்குத் தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மீனாட்சி அம்மன் கோவிலில் திடீர் மின்வெட்டு.. நிம்மதியா தரிசனம் கூட பண்ணமுடியல.. எடப்பாடி புலம்பல்!
அதன்படி, இனி வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தப் பகுதியில் செல்லப்பிராணிகள் விற்பனைச் சந்தை செயல்பட அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி விற்பனையில் ஈடுபடுவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளின் பாதுகாப்பு குறித்து கவனம்
போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் செல்லப்பிராணிகளின் பராமரிப்பு தொடர்பான புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த பிரபலமான செல்லப்பிராணிகள் சந்தைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்கு செல்லப்பிராணிகளை வாங்கி வந்த பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் இந்த உத்தரவு கவனத்தைப் பெற்றுள்ளது.