AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெகவின் தேர்தல் செலவு கணக்கு வெளியீடு.. விமான பயணத்துக்கே இத்தனை கோடியா?.. முழு விவரம்!

TVK Election Expenditure 2026: சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் செலவுக் கணக்கை தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. இதில் மொத்தம் ரூ.19.8 கோடி செலவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம், பிரச்சாரம் மற்றும் பயணச் செலவுகள் குறித்த முழு விவரங்கள் மற்றும் பிற முக்கியக் கட்சிகளின் செலவுக் கணக்கு ஒப்பீடு குறித்த விரிவானச் செய்தித் தொகுப்பு.

தவெகவின் தேர்தல் செலவு கணக்கு வெளியீடு.. விமான பயணத்துக்கே இத்தனை கோடியா?.. முழு விவரம்!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 26 Sep 2026 12:37 PM IST

சென்னை, செப்.26: நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் செலவுக் கணக்குகளை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் முறையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது சட்டப்பூர்வமான விதிமுறையாகும். இதன் அடிப்படையில், தேர்தலில் போட்டியிட்ட பல்வேறு முதன்மை அரசியல் கட்சிகள் தங்களது நிதி நிர்வாக அறிக்கைகளைத் தாக்கல் செய்து வந்த நிலையில், தமிழக அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் செலவுக் கணக்கு தற்போது இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக செலவழித்தது இத்தனை கோடியா?.. தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் சமர்ப்பித்த பகீர் கணக்குகள்!

மொத்தச் செலவு ரூ.19.8 கோடி:

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின்படி, 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சி சார்ந்த செயல்பாடுகளுக்காக மொத்தம் ரூ.19.8 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ள இந்தக் கணக்கில் கட்சித் தலைவரின் பயணங்கள், விளம்பர உத்திகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் தனித்தனியாகப் பகுத்து வழங்கப்பட்டுள்ளன.

விளம்பரம் மற்றும் பொதுக்கூட்டச் செலவுகள்:

இந்தச் செலவுக் கணக்கின் விவரங்களை நோக்கும்போது, கட்சித் தலைவரின் தேர்தல் கால விமானப் பயணங்களுக்காக மட்டும் ரூ.3 கோடியே 54 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. அதேபோல, தேர்தல் களத்தில் கட்சியின் கொள்கைகளையும் வாக்குறுதிகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விளம்பரப் பணிகளுக்காக ரூ.6 கோடியே 34 லட்சம் வரை செலவழிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் காலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரக் கூட்டங்களுக்காக ரூ.2 கோடியே 6 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வேட்பாளர்களுக்கான நிதி உதவி:

கூடுதலாக, தவேக தாக்கல் செய்துள்ள இந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் கட்சி வேட்பாளர்களுக்கென தனியாகத் தேர்தல் நிதி எதுவும் தலைமை அலுவலகத்திலிருந்து வழங்கப்படவில்லை என்றும், வேட்பாளர்களே தங்களது பிரச்சாரச் செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்கள் வாயிலான இணையவழி பிரச்சாரங்களுக்கு தனியாக எவ்விதச் செலவும் காட்டப்படவில்லை. தேர்தல் காலத்தில் அனைத்து வழிகளிலும் கிடைத்த வருவாய் ரூ.7.02 கோடி என்றும், தேர்தல் அறிவிக்கப்பட்ட போது கட்சியின் தொடக்க கையிருப்பாக ரூ.3.03 கோடி இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து சரவெடி.. என்ட்ரி கொடுக்கும் அமலாக்கத்துறை? கலக்கத்தில் காவல்துறை அதிகாரிகள்!

பிற முதன்மைக் கட்சிகளுடனான ஒப்பீடு:

ஏற்கனவே தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் ரூ.197 கோடியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் ரூ.118 கோடியும் தேர்தல் செலவாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்தச் சூழலில், புதிய அரசியல் சக்தியாகக் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் ரூ.19.8 கோடியை தேர்தல் செலவாகக் கணக்கு காட்டியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியக் கவனத்தைப் பெற்றுள்ளது.

Follow Us