ரஜினிகாந்த் குறித்து பரபரப்பு கருத்து… பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆதவ் அர்ஜூனா!
Aadhav Arjuna Apologized To Rajinikanth: நடிகர் ரஜினி காந்த் குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ரஜினி காந்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கோரினார்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்றிருந்த கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசி இருந்தார். அப்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிரட்டால் தான் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று கூறியிருந்தார். இது, அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும் திரைத்துறையினர் வரை பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்ற வார்த்தையே முக்கியமாக குறிப்பிட்டு இருந்தார்.
தவெக பொதுக்கூட்டத்தில் சலசலப்பு
இந்த நிலையில், சென்னை கொளத்தூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக் கூட்டத்தில், கட்சியின் நிர்வாகியும், ரஜினியின் ரசிகருமான அசோக்குமார் எழுந்து ரஜினிகாந்த் பற்றி தவகவினர் யார் பேசினாலும் நான் கேள்வி கேட்பேன். ரஜினியை பற்றி நீங்கள் பேசியது குறித்து மேடையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து, கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், தலைவர் ரஜினிகாந்த் மீது எங்களுக்கு வெறுப்பு கிடையாது. அவர் மீது அன்பு மட்டுமே உள்ளது.
மேலும் படிக்க: தாம்பரம் – காரைக்கால் ரயில் வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!




நடிகர் ரஜினியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆதவ் அர்ஜூனா
நடிகர் ரஜினியை சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமோ அல்லது அவர் பயந்துவிட்டார் என்பதையோ நான் குறிப்பிடவில்லை. அவர் அரசியலுக்கு வராததற்கு காரணம் திமுகவின் சூழ்ச்சி என்ற அடிப்படையில் தான் கருத்தை தெரிவித்து இருந்தேன். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நான் சொல்ல வந்த நோக்கம் வேறாகும். நான் பேசியது உங்களுக்கு ஏதேனும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால், அதற்காக எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறேன்.
ரஜினியின் உணர்வுக்கு மரியாதை அளிக்கிறேன்
வேறு யாருக்காகவும் நான் பதில் கொடுப்பதற்கு இங்கு வரவில்லை. ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்த அறிக்கையே படித்திருந்தேன். அவரது உணர்வுக்கு மரியாதை கொடுக்கிறேன் என தெரிவித்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு அழைப்பு விடுத்ததுடன், பல்வேறு ஆஃபர்களை கொடுத்திருந்தார்கள். ஆனால், அனைத்தையும் விஜய் நிராகரித்து விட்டார் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: சுட்டெரிக்கும் வெயில்.. வாகன ஓட்டிகளுக்காக சென்னையில் 40 சிக்னல்களில் பசுமை பந்தல்கள்!