நள்ளிரவில் வெளியான சர்ச்சை வீடியோ.. கொந்தளித்த தவெக வேட்பாளர் சத்தியபாமா.. நடந்தது என்ன?
TVK Candidate Sathyabama Clarifies Video Controversy: தேர்தல் பிரசாரத்தில் ரூ.31 கோடி செலவு செய்ததாக வெளியான வீடியோ சித்தரிக்கப்பட்டது என தவேக வேட்பாளர் சத்தியபாமா மறுப்பு தெரிவித்துள்ளார். அதேவேளையில், கடைசி நேர சர்ச்சை வீடியோக்கள் வாக்கு வங்கியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற விவாதமும் தேர்தல் களத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
திருப்பூர், அக்.06: தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்தேர்தலில் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா குறித்து, நள்ளிரவில் இணையதளங்களில் வெளியான சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை தாராபுரம் தொகுதியில் தனது வாக்கினை செலுத்த வந்த தவெக வேட்பாளர் சத்தியபாமாவிடம், சர்ச்சை வீடியோ தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கமளித்த அவர், பிரசாரத்தின் தொடக்கத்தில் இருந்தே தன் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களும் சதிகளும் முன்னெடுக்கப்பட்டு வருதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் குண்டுக்கட்டாகக் கைது.. காவல்துறையுடன் கடும் தள்ளுமுள்ளு!!
வெற்றி வாய்ப்பும் எதிரத்தரப்பின் டார்கெட்டும்:
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சத்தியபாமா, இத்தேர்தலில் தவெகவின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதைச் சகித்துக் கொள்ள முடியாமலேயே எதிரத்தரப்பினர் தொடர்ந்து தன்னை இலக்கு வைத்து தாக்கி வருவதாகக் குற்றம்சாட்டினார். தேர்தல் பிரசாரம் தொடங்கியது முதலே தனக்கு எதிராக பல்வேறு பொய்ப் பிரசாரங்களும் சோடிக்கப்பட்ட தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன என்றும், அதன் தொடர்ச்சியாகவே இந்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தொகுதி மக்கள் அனைவரும் உண்மை நிலையை நன்கு உணர்ந்து தெளிவான மனநிலையுடன் இருப்பதால், இத்தகைய மலிவான உத்திகள் தேர்தல் முடிவுகளில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கத் திட்டம்:
தேர்தல் களத்தில் நிலவும் வாக்கு வித்தியாசம் மற்றும் அரசியல் சூழல்கள் குறித்துப் பேசிய அவர், தவெகவிற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு அலை வீசுவதாகத் தெரிவித்தார். மேலும், திட்டமிட்டுத் தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் இணையதளங்களில் போலி வீடியோவைப் பரப்பியவர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் முறைப்படி புகார் அளிக்க உள்ளதாகவும் சத்தியபாமா உறுதிபடத் தெரிவித்தார். மக்கள் தங்கள் பக்கம் இருப்பதாகவும், இத்தகைய சோடிக்கப்பட்ட சர்ச்சைகளைக் கடந்து தவெக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: நெல்லை அருகே சம்பவம்.. கட்டிலில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளி.. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சர்ச்சை வீடியோக்களும் வாக்காளர் மனநிலையும்:
வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் பரப்பப்படும் இத்தகைய சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களின் மனநிலையில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த காலங்களில் வெளியான சில முக்கிய விடியோக்கள் தேர்தல் முடிவுகளில் மாறுபட்ட விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன. பெரும்பாலான வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தேர்தல் பிரசாரங்களுக்கு முன்பாகவே முடிவெடுத்து விடுகிறார்கள் என்றும், இதனால் கடைசி நேரத்தில் பரப்பப்படும் வீடியோக்கள் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.