போக்குவரத்து வேலை மோசடி வழக்கு: விசாரணையை இழுத்தடித்தால் ஜாமீன் ரத்து! செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை..
Special Court Warns Senthil Balaji: தேவையின்றி வழக்கின் விசாரணையை இழுத்தடிக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, விருப்பம்போல் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தால் குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.
நவம்பர் 12, 2026: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கின் விசாரணையைத் தேவையின்றி இழுத்தடிக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி விருப்பம்போல் மனுக்களைத் தாக்கல் செய்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார்.
போக்குவரத்து வேலை மோசடி வழக்கு – பின்னணி என்ன?
கடந்த 2011-2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத் துறையில் பணியிடங்களைப் பணம் பெற்றுக்கொண்டு நிரப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த விவகாரத்தில், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 2,200-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் படிக்க: தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா? எதற்கும் நாங்கள் தயார்.. கே.ஏ.செங்கோட்டையன்!
இந்த வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி என்.லோகேஷ்வரன் முன்னிலையில் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கான விசாரணைக்கு வந்தன.
வழக்கை இழுத்தடித்தால் ஜாமின் ரத்து – செந்தில் பாலஜிக்கு எச்சரிக்கை
அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஒவ்வொருவரும் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்வதை ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைவரும் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், எப்போது மனுத் தாக்கல் செய்யப்படும் என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? எல்லாவற்றையும் பொதுவெளியில் பேச முடியாது – எடப்பாடி பழனிசாமி சூசகம்!
மேலும், தேவையின்றி வழக்கின் விசாரணையை இழுத்தடிக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, விருப்பம்போல் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தால் குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோரிடம், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி எப்போது மனுத் தாக்கல் செய்ய உள்ளீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு, விரைவில் மனுத் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.