சுற்றுலா பயணிகள் வானில் பறக்கலாம்…25 கி.மீ.அலாதி பயணம்…வேளாங்கண்ணியில் விரைவில் வருகிறது!
Tourist Helicopter Service In Velankanni: நாகப்பட்டிணம் மாவட்டத்தில் முதல் முறையாக சுற்றுலா ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக ஹெலிபேட் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்ட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், தமிழகத்தின் உயரமான கலங்கரை விளக்கம், கோடியக்கரை பறவைகள் சரணாலயம், மிக நீண்ட தூர கடற்கரை மற்றும் நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. இதனால், இந்த சுற்றுலா தளங்களை பார்வையிடுவதற்காக தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் இந்த சுற்றுலா தலங்களில் குவிந்து காணப்படுபவர். மேலும், அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
வேளாங்கண்ணியில் சுற்றுலா ஹெலிகாப்டர் சேவை
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுலா தளங்களை ஹெலிகாப்டரில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று சுற்றி காண்பிப்பது போல, வேளாங்கண்ணியிலும் சுற்றுலா தலங்களை சுற்றி காண்பிப்பதற்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக முதல் கட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: ஊட்டி அருகே 120 அடி பள்ளத்தில் விழுந்த மினிபஸ் – 20 பேர் பலத்த காயம்… 3 பேர் நிலைமை கவலைக்கிடம்




வேளாங்கண்ணியில் ஹெலிபேட் அமைக்கும் பணி
இதில், வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் இறங்கி செல்வதற்காக ஹெலிபேட் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு வரவுள்ள ஹெலிகாப்டரானது, வேளாங்கண்ணியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் வான் பரப்பில் சுற்றி காண்பிக்கப்படும். இந்த ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் 6 பேர் வரை பயணம் செய்யலாம். இந்த அலாதியான ஹெலிகாப்டர் பயணத்தை மேற்கொள்வதற்கு ஒரு பயணிக்கு ரூ. 6000 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
சென்னை-திருச்சி விமான நிலையத்துக்கு…
இதற்காக, கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் வேளாங்கண்ணிக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, வேளாங்கண்ணியில் இருந்து, சென்னை மற்றும் திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையத்துக்கு ஹெலிகாப்டர் சேவை விரிவு படுத்தப்பட உள்ளது. இந்த ஹெலிகாப்டர் சேவைக்காக ஜெயம் ஏவியேசன் நிறுவனம் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஜனவரி மாத இறுதியில் ஹெலிகாப்டர் சேவை
இந்த ஹெலிகாப்டர் சேவை வரும் பட்சத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியின் ஒரு மைல் கல்லாக மாறும். வேளாங்கண்ணியில் கொண்டு வரப்பட உள்ள ஹெலிகாப்டர் சேவை இந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி…விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு?