பாரா கிளைடிங் செய்யும்போது கீழே விழுந்து பலியான வீரர்.. இமாச்சலில் சோக சம்பவம்!
Man Fell From The Sky | பாராசூட், பாரா கிளைடிங் உள்ளிட்ட சாகச விளையாட்டுக்களை பலரும் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் பாரா கிளைடிங் செய்துக்கொண்டு இருந்த சாகச வீரர் ஒருவர் கீழே விழுந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியாகியுள்ளார்.
சிம்லா, டிசம்பர் 28 : இமாச்சல் பிரதேச (Himachal Pradesh) மாநிலம், காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பிர் பில்லிங் பகுதி உள்ளது. இந்த பகுதி பாரா கிளைடிங் (Paragliding) எனப்படும் சாகச விளையாட்டுக்கு மிகவும் புகழ் பெற்றது ஆகும். பாராசூட்டில் பறப்பதை போன்ற ஒரு சாகச விளையாட்டு தான் இந்த பாரா கிளைடிங். இந்த விளையாட்டில் பாராசூட்டுக்கு பதிலாக இறக்கை போன்ற ஒன்றை பயன்படுத்தி உயரமான இடத்தில் இருந்து கீழே குதிப்பார்கள். அவ்வாறு உயரமான பகுதியில் இருந்து குதிக்கும் பட்சத்தில் காற்றின் உதவியுடன் பாரா கிளைடிங் செய்யும் நபர் மிதந்து செல்வார். இது மிகவும் சாகசம் மிகுந்த விளையாட்டாக உள்ள நிலையில், பலரும் இதனை விரும்பி செய்கின்றனர்.
பாரா கிளைடிங் செய்யும்போது கீழே விழுந்து பலியான நபர்
அந்த வகையில் பிர் பில்லிங் பாரா கிளைடிங் தளத்தில் இருந்து இன்று (டிசம்பர் 28, 2025) மோகன் சிங் என்ற நபரும், மற்றொரு சுற்றுலா பயணியும் இணைந்து பாரா கிளைடிங் செய்துள்ளனர். அவர்கள் இருவரும் உயரமான இடத்தில் இருந்து குதித்து காற்றில் பறந்து பாரா கிளைடிங் செய்துக்கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக இறக்கையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இதையும் படிங்க : வெளிநாட்டு போதைப்பொருள்.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரரை தேடும் போலீஸ்.. நடந்தது என்ன?
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக பலியான நபர்
இந்த விபத்தில் பாரா கிளைடிங் செய்த சாகச வீரர் மோகன் சிங்கிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருடன் சென்ற சுற்றுலா பயணி சிறிய காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பலத்த காயமடைந்த மோகன் சிங்கை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க : “செல்போன், அரை கால்சட்டைக்கு தடை”.. இளைஞர்கள், சிறுவர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா?.. எங்கு தெரியுமா?
இந்த நிலையில், இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதா அல்லது மனித தவறு இதற்கு காரணமாக என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இத்தகைய சாகச விளையாட்டுக்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.