உதவித்தொகை மாதம் ரூ.1,500ஆக உயர்வு.. முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான சூப்பர் அறிவிப்பு!!
TN interim budget 2026: இதன் மூலம், உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை 3,632 மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரல் உரக்க ஒலித்திடச் செய்யும் இந்நடவடிக்கை நாடெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் 4% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தங்கம் தென்னரசு
சென்னை, பிப்ரவரி 17: தமிழக சட்டப்பேரைவையில் இன்று தனது இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வாசித்து வருகிறார். சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட இருக்கிறது. ஆகவே, இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கான அறிவிப்பு:
முதுமையின் துயர் துடைக்க மூத்த குடிமக்களுக்குப் பகல் நேரப் பராமரிப்பு மையங்களாக ‘அன்புச் சோலைகள்’, 25 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதுமுதிர்ந்தோர் சிரமமின்றிப் பொருட்கள் பெறவேண்டும் என்ற மேன்மையான நோக்கத்தில், அவர்களின் இல்லத்திற்கே பொருட்களை நேரடியாகக் கொண்டு சென்று விநியோகிக்கும் முறையினை, ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் இந்த அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை, 27,40,703 தகுதியுடைய பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் நலன்:
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இந்த அரசு, அவர்களுக்கு உரிய அதிகாரம் கிடைத்திடுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே முதன்முறையாக, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாக நியமிக்கும் வகையில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 ஆகியவற்றில் உரிய திருத்தங்களை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
அரசு வேலைவாய்ப்பில் 4% இடஒதுக்கீடு:
இதன் மூலம், உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை 3,632 மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரல் உரக்க ஒலித்திடச் செய்யும் இந்நடவடிக்கை நாடெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு வேலைவாய்ப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு நேரடி நியமன முறையில் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பணி உயர்வு முறையிலும் இட ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.
மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்வு:
தங்களைத் தாங்களே பராமரித்திட இயலாத மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் பராமரிப்புத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையினை 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக அதிகரித்ததன் மூலம் 8,52,680 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.