மின்துறை அமைச்சர் மேடையில் இருக்கும்போதே மின்வெட்டு – அமைச்சர் சொன்ன காரணம்
Minister Explains Power Cut : மதுரை அரசு சட்டக் கல்லூரியில் செப்டம்பர் 26, 2026 இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்ட நிலையில் அங்கு திடீரென மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, செப்டம்பர் 26 : மதுரை அரசு சட்டக் கல்லூரியில் செப்டம்பர் 26, 2026 இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மேடையில் அமர்ந்திருந்த நேரத்திலேயே இந்த மின்வெட்டு ஏற்பட்டது, தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் நிர்மல்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
மின்துறை அமைச்சர் மேடையில் இருக்கும்போதே மின்வெட்டு
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அரங்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். அவர் இருக்கும் போதே மின் தடை ஏற்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதனையடுத்து மின்வாரியம் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளது.




இதையும் படிக்க : “திமுக ஏன் இவ்வளவு ஓவர் ரியாக்ட் செய்கிறது?”.. ஜெம் வீரமணி விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் சரமாரி கேள்வி!
இது தொடர்பாக மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு மின் விநியோகம், மின்வாரியத்தின் கட்டமைப்பிலிருந்து வழங்கப்படவில்லை. மாறாக, 3 ஜெனரேட்டர்களிலிருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது, விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் ஆகியவற்றிற்கு மின்சாரம் வழங்கிய ஜெனரேட்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக மின் வழங்கல் தானியங்கி முறையில் தயார் நிலையில் இருந்த கூடுதல் ஜெனரேட்டருக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்கு 5 வினாடிகள் மட்டுமே ஆனது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விளக்கம்
The function premises was operated in generator due to power switch over from one generator to other generator due to which there was a power cut for 5 seconds. https://t.co/mO46UxFz4c
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) September 26, 2026
இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமாரும் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஒரு ஜெனரேட்டரில் இருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு மின்சார இணைப்பை மாற்றியபோது, 5 விநாடிகள் மட்டும் மின்தடை ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : 98 மலைக் கிராம மக்களை வெளியேற்ற எதிர்ப்பு.. 500க்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்புப் போராட்டம்!!
முன்னதாக தமிழகத்தின் பல பகுதிகளில் சமீப காலமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்தப் பிரச்னை தொடர்பாக சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் சமீபத்தில் நேரடியாக ஆய்வு நடத்தினார். ஆனாலும் மின்வெட்டு இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இதுகுறித்த பேட்டியளித்த அமைச்சர் நிர்மல்குமார், மின்வெட்டு பிரச்னையைச் சரிசெய்யும் பணிகள் நடந்து வருவதாகவும், அடுத்த 3 மாதங்களுக்குள் முழுமையாகத் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார். அவர் இந்த வாக்குறுதியை அளித்த அதே நாளில், அவர் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே மின்சாரம் தடைபட்டுள்ளது.