AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“திமுக ஏன் இவ்வளவு ஓவர் ரியாக்ட் செய்கிறது?”.. ஜெம் வீரமணி விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் சரமாரி கேள்வி!

Minister Nirmalkumar Slams DMK: மதுரையில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ குறித்து விளக்கியதுடன், ஜெம் வீரமணி விவகாரத்தில் திமுக அரசு காட்டிய மெத்தனப் போக்கையும், வழக்கை மறைக்க நடந்த கட்டப் பஞ்சாயத்துகளையும் கடுமையாகச் சாடி சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

“திமுக ஏன் இவ்வளவு ஓவர் ரியாக்ட் செய்கிறது?”.. ஜெம் வீரமணி விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் சரமாரி கேள்வி!
அமைச்சர் நிர்மல்குமார்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 26 Sep 2026 14:03 PM IST

சென்னை, செப்.26: தமிழக முதல்வர் வரும் 28-ஆம் தேதி மதுரைக்கு வருகை தரவுள்ளார். மதுரையில் ஏழை எளிய மக்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ தொடக்க விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம் திறப்பு விழா ஆகிய இரு முக்கிய நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கவுள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக மதுரைக்கு வருகை தந்த அமைச்சர் நிர்மல்குமார், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் இணைந்து நேரில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், முதல்வரின் வருகை குறித்தும், நிலுவையில் உள்ள அரசியல் மற்றும் சட்ட ரீதியான குற்றச்சாட்டுகள் குறித்தும் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

இதையும் படிக்க: தவெகவின் தேர்தல் செலவு கணக்கு வெளியீடு.. விமான பயணத்துக்கே இத்தனை கோடியா?.. முழு விவரம்!

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்:

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ஏழை எளிய மக்களுக்குப் பயனுள்ள வகையில் அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை’ மதுரையில் இருந்து முதல்வர் தொடங்கி வைப்பது தென் மாவட்ட மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும் என்று குறிப்பிட்டார். முந்தைய ஆட்சிக் காலங்களில் நிறுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு மாற்றாக இத்தகைய புதிய திட்டங்கள் கொண்டுவரப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். முதல்வரின் பயணத் திட்டத்தைப் பொறுத்தவரை, இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள இந்த இரு நிகழ்ச்சிகள் தவிர்த்து மற்ற விவரங்கள் மற்றும் நேர அட்டவணை முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

திமுக மீது கடுமையான குற்றச்சாட்டு:

இதனைத் தொடர்ந்து, ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக சார்பில் முன்வைக்கப்படும் கருத்துகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், இந்த விவகாரத்தில் திமுக ஏன் இவ்வளவு ‘ஓவர் ரியாக்ட்’ செய்கிறது என்று கேள்வி எழுப்பினார். சாதாரணமான ஒரு விஷயம் போல கடந்து போக முடியாத அளவிற்கு இதில் மிகப்பெரிய தவறுகளும் முறைகேடுகளும் மறைக்கப்பட்டுள்ளதாகச் சாடினார். முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ‘வீடியோ நிழலாக உள்ளது’ என சாக்குபோக்கு சொல்வதும், போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கைக் கைவிட்டதாகக் கூறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், திமுக தொடர்ந்து குற்றவாளிகளைக் காப்பாற்றும் வேலையையே செய்து வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதையும் படிக்க: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக செலவழித்தது இத்தனை கோடியா?.. தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் சமர்ப்பித்த பகீர் கணக்குகள்!

கட்டப் பஞ்சாயத்து குற்றச்சாட்டுகள்:

மேலும் பேசிய அமைச்சர், 2024-ஆம் ஆண்டிலேயே இது தொடர்பான புகார்கள் அப்போதைய காவல்துறை இணை ஆணையர், ஆணையர் மற்றும் முதல்வரின் கவனத்திற்குச் சென்றிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு எழுப்பப்பட்டபோதும், அதனை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்காமல் அப்போதைய அரசு அமைதி காத்தது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். மேலும், இந்த விவகாரத்தைப் பயன்படுத்திப் பல கோடிகளுக்குப் பேரம்பேசப்பட்டதாகவும், பல நபர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்து பணம் பறித்ததாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன என்றும் கூறினார். உளவுத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் நகரில் ஒரு அங்ங்குலம் கூட நகர முடியாது எனும் நிலையில், அப்போதைய முதலமைச்சருக்கும் உள்துறைக்கும் இது தெரிந்துமா நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், ஒன்றரை ஆண்ட காலமாகத் திரைமறைவில் நடந்த இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை மக்கள் உணர்ந்துள்ளார்கள் என்று கூறினார்.

Follow Us