“ஆதவ் அர்ஜுனா 2 மணி நேரம் ‘பிரைன்வாஷ்’ பண்ணார்.. துணை முதல்வர் பதவி ஆசை காமித்தார்!”.. ரகசியத்தை உடைத்த திருமாவளவன்!!
Aadhav Arjuna Brainwash: தவெக கூட்டணியில் இணைந்தது குறித்து மேடையில் நெகிழ்ச்சியோடு விளக்கிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா தன்னிடம் பேசிய ரகசியங்கள், டெல்லியில் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் மற்றும் விஜய்யின் 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' கொள்கை குறித்துப் பேசிய முழுமையான செய்திக் தொகுப்பு.
செங்கல்பட்டு, அக்.02: திமுக கூட்டணியை விட்டு வெளியேறி விஜய் தலைமையிலான கூட்டணியில் இணைந்ததற்கான உண்மையான பின்னணிகளையும், ஆதவ் அர்ஜுனா தன்னிடம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் ரகசியங்களையும் விசிக தலைவர் திருமாளவன் விரிவாக வெளிப்படுத்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று (வியாழக்கிழமை) பரப்புரை மேற்கொண்டனர். இதில், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றிய திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா விசிகவில் இணைந்தது முதலே மாற்றி யோசிக்குமாறு தன்னிடம் வலியுறுத்தி வந்ததாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: கூட்டணி ஆதரவின்றி திமுகவால் 10 தொகுதி ஜெயிக்க முடியுமா? மதுராந்தகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா காட்டம்!
ஆதவ் “பிரைன் வாஷ்” செய்தார்:
“கொள்கையை நீங்கள் பேசுங்கள், ஆனால் அதிகாரத்திற்கு வருவதற்காகவும் சிந்தியுங்கள். புதிய அணியை உருவாக்குவோம், பாஜக இல்லாத ஒரு மாற்று அணியை என்னால் உருவாக்க முடியும்” என்று ஆதவ் அர்ஜுனா பலமுறை தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். டெல்லிக்கு வந்து சுமார் 2 மணி நேரம் தனது மூளையைக் கழற்றி வைப்பது போல ‘பிரைன் வாஷ்’ செய்து, துணை முதலமைச்சர் பதவி வரை ஆசை காட்டிப் பார்த்ததாகவும், ஆனால் கொள்கைப் பிடிப்பாலும் திமுக கூட்டணிக்குக் கலங்கம் வரக்கூடாது என்பதாலும் அப்போதைக்குத் தான் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
அம்பேத்கர் புத்தக வெளியீடு:
ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் இணைந்து ‘அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத் தொகுப்பைக் கொண்டு வந்தபோது, அதை முதலில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் கொண்டு வெளியிடவே திட்டமிட்டனர். ஆனால், முதலமைச்சரிடமிருந்து எவ்வித இசைவும் வராததாலும், ராகுல் காந்தியைச் சந்திக்க முடியாமல் போனதாலும், இறுதியில் விஜய் அந்தப் புத்தகத்தை வெளியிட ஒப்புக்கொண்டார். அப்போது தவெக தலைவர் விஜய், “தொல்.திருமாவளவன் இங்கே நேரடியாக இல்லை என்றாலும், அவரது மனம் இங்கேதான் இருக்கும்” என்று உரிமையோடு குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த திருமாவளவன், அதுவே இரு தரப்புக்கும் இடையிலான நல் உறவுக்குப் பிள்ளையார் சுழி போட்டது என்றார்.
மும்முனை அரசியலும் மக்கள் தீர்ப்பும்:
தமிழக அரசியல் சூழல் தற்போது இருமுனை அரசியலிலிருந்து மும்முனை அரசியலாக மாறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய திருமாவளவன், தவெகவுடன் விசிக கைக்கோர்த்தது ‘காலமிட்ட கட்டளை’ என்று வர்ணித்தார். “நாங்கள் இடம் பெற்றிருந்த அணியே வெற்றி பெற வேண்டும் என நினைத்தது உண்மைதான். ஆனால், மக்கள் ஜனநாயகத்தில் வேறு ஒரு கணக்கைப் போட்டு விஜய்யை ஒரு வலுவான மாற்று சக்தியாகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். 106 இடங்களுக்கு மேல் ஒரு புதிய கட்சி வெற்றி பெறுவது சாதாரண விஷயமல்ல. மக்களின் அந்தத் தீர்ப்பை நாம் மதித்தே ஆக வேண்டும்” என்று விளக்கமளித்தார்.
இதையும் படிக்க : தவெக கூட்டணிக்கு பாமக வந்தால்… விசிக வெளியேறிவிடும்.. கட்சியின் பொருளாளர் தடாலடி!
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு:
தேர்தலுக்கு முன்பாகவே “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற கொள்கைப் பிரகடனத்தை தைரியமாக அறிவித்த ஒரே தலைவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மட்டுமே என்பதை திருமாவளவன் சுட்டிக்காட்டினார். 2009-ல் டெல்லி அளவில் காங்கிரஸால் தனக்கு மத்திய அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டு, கடைசி நேரத்தில் அது தடுத்து நிறுத்தப்பட்ட கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள யாரும் முன்வராத சூழலில், எளிய மக்களுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கத் தயார் எனக் கூறிய விஜய்யின் தாராள மனப்பான்மையைப் பாராட்டினார். விசிக பிரதிநிதிகள் அமைச்சரவையில் இடம்பெறுவது ஒரு வரலாற்றுத் தேவையாக இருப்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களின் வெற்றி கூட்டணி ஆட்சிக்கான புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்றும் கூறினார்.