உள்ளாட்சி ஊழியர்களுக்கு புதிய பணிமாறுதல் விதிகள்.. 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர அனுமதி இல்லை!
Transfer Guidelines for Municipal and Panchayat Staff: தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் பணிமாறுதல் இனி ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மட்டுமே நடைபெறும் என அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகள் முடித்தவர்கள் கட்டாயம் மாற்றப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நவ.23: தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் பணியிட மாறுதல்கள் இனி முழுமையாக ஆன்லைன் கலந்தாய்வு வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்படும் எனத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையுடன் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஊதிய நிலை 20 அல்லது அதற்குக் கீழ் நிலையில் உள்ள பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி சுகாதாரத் துறை ஊழியர்களுக்கான இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிட மாறுதல் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் சீரான நடைமுறைகளைக் கொண்டு வரும் வகையில் இந்தப் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்திற்குள் கலந்தாய்வு மூலம் இடமாற்றங்களைச் செயல்படுத்த அரசு வழிவகை செய்துள்ளது.
இதையும் படிக்க : கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவது யார்? கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் விஜய் – வெளியான முக்கிய தகவல்
மூன்று ஆண்டு விதி பொதுப் பணிமாறுதல் காலம்:
புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒரே அலுவலகத்தில் மூன்று ஆண்டுகள் பணியை நிறைவு செய்த ஊழியர்கள் கட்டாயம் வேறு அலுவலகத்திற்கு மாற்றப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்ற அனுமதி இல்லை என்றும், இந்த மூன்று ஆண்டுக் கணக்கீட்டிற்கான முக்கியத் தேதியாக மே 31 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொதுப் பணிமாறுதல் நடவடிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையிலான காலத்திற்குள் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பதவி உயர்வு மற்றும் விருப்ப இடமாறுதல் விதிகள்:
பணியில் பதவி உயர்வு பெறும் ஊழியர்கள் வேறு உள்ளாட்சி அமைப்பிற்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்கள் ஓராண்டு நிறைவடைந்த பிறகு விருப்ப இடமாறுதலுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றாலும், ஒருமுறை விருப்பப் பணிமாறுதல் பெற்றுவிட்டால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் விருப்ப மாறுதலுக்கு விண்ணப்பிக்க முடியாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சீறி வந்த கனரக லாரி.. சக்கரத்தில் சிக்கிய ஸ்கூட்டி.. தாய், 2 மகன்கள் ரத்த வெள்ளத்தில் பலி.. தஞ்சையில் சோகம்!
புகார் அடிப்படையிலான மாற்றம்:
புகாரின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்கள், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதே அலுவலகத்திற்குத் திரும்பிச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பணியிலிருந்து ஓய்வு பெற ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான காலம் மட்டுமே உள்ள ஊழியர்களுக்கு இந்தப் பணிமாறுதல் விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.