“நடுக்கடலில் பயங்கரம்!”.. சவுதியில் ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு.. தமிழக மீனவர் பரிதாப பலி!!
Tamil Nadu Fisherman Shot Dead: சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த மாவீரன் என்ற தமிழக மீனவர் உயிரிழந்தார். காயமடைந்த மற்றொரு மீனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம், ஆகஸ்ட் 13: வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்குச் சென்று நடுக்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்கள், அவ்வப்போது பல்வேறு ஆபத்து சந்திக்க நேரிடுகிறது. அந்த வகையில், சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது, ஈரான் நாட்டைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடுக்கடலில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், மற்றொரு மீனவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: “எனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் கிடைக்கக்கூடாது” திருப்பூர் தாய்- மகள் இரட்டை கொலை.. கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்!
நடுக்கடலில் நடந்த பயங்கரத் தாக்குதல்:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள தொடுவாய் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன், திருமலைவாசலைச் சேர்ந்த மீனவர், கீழ மூவர்க்கரையைச் சேர்ந்த சங்கர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் என மொத்தம் நான்கு பேர் சவுதி அரேபியா நாட்டில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் வழக்கம்போல கடந்த 10-ஆம் தேதி இரவு சவுதி அரேபியக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள், எதிர்பாராத விதமாக மீனவர்களை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மீனவர் உயிரிழப்பு மற்றும் சிகிச்சை:
ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில், தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் மீது குண்டுகள் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த கீழ மூவர்க்கரையைச் சேர்ந்த சங்கர் என்ற மீனவர் பலத்த காயமடைந்தார். இச்சம்பவத்தை அடுத்து, சவுதி அரேபிய கடற்படை மற்றும் ராணுவத்தினர் விரைந்து வந்து காயமடைந்த சங்கரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த மாவீரனின் உடலையும் சவுதி அரேபிய ராணுவம் கைப்பற்றித் தங்கள் பாதுகாப்பில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் படிக்க: அடுத்த 7 நாட்களுக்கு சில்லென மாறப்போகும் தமிழகம்.. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..
உடலை மீட்கக் குடும்பத்தினர் கோரிக்கை:
சவுதி அரேபியாவில் நடுக்கடலில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், உயிரிழந்த மாவீரனின் குடும்பத்தினரும், தொடுவாய் கிராம மக்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உயிரிழந்த மாவீரனின் உடலை உடனடியாகச் சவுதியிலிருந்து தாயகத்திற்கு மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை ஏற்று, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகமும், மீனவர் நலத்துறையும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.