19 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. செப்டம்பர் 8ஆம் தேதி வரை மிதமான மழை இருக்கும் – வானிலை ரிப்போர்ட்..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 2, 2026: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றோட்டத் தாழ்வுப் பாதை காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பதிவாகி வருகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 2-ம் தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 8ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு:
செப்டம்பர் 3-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: “சினிமா படம் மாதிரி ஆட்சி நடத்துறாங்க.. சபாநாயகர் நடுநிலை இல்லை!”.. தவெக அரசைத் தூள் தூளாக்கிய டிடிவி தினகரன்!!
செப்டம்பர் 4-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். இந்த நிலை செப்டம்பர் 8-ம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள் தமிழகத்தில் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை:
இதனிடையே, செப்டம்பர் 6-ம் தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலை கடலோர தமிழகத்திற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம்.. விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைத்த விவசாயி.. திருப்பூரில் சம்பவம்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.