Tamil Nadu Weather forecast: தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்யும்.. இந்த 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
Tamil Nadu weather today: தமிழகத்தில் இன்று திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி என 27 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதோடு, கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
சென்னை, அக்.04: தமிழகத்தில் இன்று கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி ஒன்று நிலைகொண்டுள்ளது. இதுதவிர, அதே பகுதியிலிருந்து வடகேரளம் வழியாக மத்திய கிழக்கு அரபிக்கடல் வரை காற்றழுத்த தாழ்வுப் பாதையும் நீண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
இதையும் படிக்க: “யார் பணத்தில் திட்டங்கள்?”.. முதல்வர் விஜய்யின் கேள்வியும்.. மு.க.ஸ்டாலினின் அதிரடி பதிலடியும்!!
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (அக்.05) கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தேனி ஆகிய இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 27 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு:
தொடர்ந்து, நாளை (அக்.06) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதனைத்தொடர்ந்து, அக்.07 மற்றும் 08ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை நிலவரம்:
இன்று முதல் அக்.08ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்
இதையும் படிக்க : “போனால் போகட்டும் போடா!”.. தவெக தலைமை மீது நாஞ்சில் சம்பத் அதிருப்தியா?.. அதிர்ச்சியில் தொண்டர்கள்!!
சென்னையில் வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.