Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu News Updates: தேர்தல் ஆணையம் கதவை தட்டிய ராமதாஸ்.. நடந்தது என்ன?

Tamil Nadu Breaking News Today 12 August 2025, Updates: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் அன்புமணி தலைமையில் ஆகஸ்ட் 9ல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதனால் தேர்தல் ஆணையத்திடம் ராமதாஸ் புகாரளித்துள்ளார்.

C Murugadoss
C Murugadoss | Updated On: 12 Aug 2025 19:59 PM IST
Share
Tamil Nadu News Updates: தேர்தல் ஆணையம் கதவை தட்டிய ராமதாஸ்.. நடந்தது என்ன?
தமிழ்நாடு செய்திகள்

Breaking News in Tamil Today 12 August 2025 Updates: வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 12, 2025 அன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் ஜூடோ பயற்சியாளர் கெபராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். அவரது தண்டனை விவரங்கள் ஆகஸ்ட் 12, 2025 அன்று நீதிமன்றம் அறிவிக்கவிருக்கிறது. சென்னையில் திடக்கழிவு மேலாண்மையை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சியின் முடிவுக்கு எதிராக தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து 12வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அதுகுறித்த அப்டேட்டை இந்தப் பக்கத்தில் பார்க்கலாம். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 12, 2025 அன்று மின் தடை ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரங்களை இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம். மேலும் பல அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்

மேலும் தமிழ்நாடு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 12 Aug 2025 07:00 PM (IST)

    கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் திட்டம்.. வெளியான அப்டேட்!

    கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி லேப்டாப் வழங்க 2 நிறுவனங்கள் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 15.6 அங்குலத்தில் ரூ.40,828க்கு டெல் நிறுவனமும், 14 அங்குலத்தில் ரூ.23,385க்கு ஏசர் நிறுவனமும் லேப்டாப் வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

  • 12 Aug 2025 06:47 PM (IST)

    கூலி படத்திற்கு ஆகஸ்ட் 14ல் மட்டும் சிறப்பு காட்சி.. தமிழக அரசு அனுமதி

    ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ள கூலி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படியான நிலையில் இந்த படத்திற்கு டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஆகஸ்ட் 14ம் தேதி மட்டும் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

  • 12 Aug 2025 06:32 PM (IST)

    அன்புமணி மீது நடவடிக்கை வேண்டும்… தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்

    பாமகவில் எவ்வித அதிகாரமும் இன்றி அன்புமணி கூட்டங்களை நடத்துகிறார் என தேர்தல் ஆணையத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். கட்சி நிறுவனருக்கு அழைப்பு விடுக்காமல் அன்புமணி கூட்டம் நடத்தியது தவறு. அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

  • 12 Aug 2025 06:14 PM (IST)

    காரில் கல்லூரிக்கு சென்று விடுவதாக கூறி மாணவி பாலியல் வன்கொடுமை

    கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நாமக்கல் மாவட்டம் வாழவந்திகாடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் கல்லூரிக்கு சென்று விடுவதாக கூறி அத்துமீறி நடந்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

  • 12 Aug 2025 05:58 PM (IST)

    பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்த நாட்டு வெடி.. 2 பேர் காயம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாணவர் ஒருவர் நாட்டு வெடி எடுத்து வந்துள்ள நிலையில் எதிர்பாராத விதமாக அது வெடித்தது. இதில் 2 மாணவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 12 Aug 2025 05:45 PM (IST)

    தமிழ்நாட்டில் 8 மாதங்களில் நாய்க்கடியால் 20 பேர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நாய்க்கடியால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 3,67,604 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்பட்சமாக சேலத்தில் 25,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 12 Aug 2025 05:29 PM (IST)

    கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்க தகுதி இல்லை.. இபிஎஸ்க்கு முத்தரசன் பதிலடி!

    கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு எள்ளளவு கூட தகுதி கிடையாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். அவருக்கு அதிமுகவின் வரலாறே தெரியாது எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

  • 12 Aug 2025 05:15 PM (IST)

    50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினி.. பாராட்டு விழா நடத்த கோரிக்கை

    தமிழ் திரையுலகில் நடிகர் ரஜினிகாந்த் ஆகஸ்ட் 15ம் தேதி 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதனை முன்னிட்டு அவருக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலக சங்கங்கள் இணைந்து ரஜினிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • 12 Aug 2025 05:01 PM (IST)

    செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு – மனு தள்ளுபடி

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எம்.பி., எம்.எல்.ஏ., மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற விசாரணை முடியும் வரை வழக்கை தள்ளிவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

  • 12 Aug 2025 04:46 PM (IST)

    சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டண கொள்ளை

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒன்றரை நாட்கள் காரை பார்க்கிங்கில் நிறுத்தியதற்காக ரூ. 1,585 வசூலிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்க்கிங் கட்டண டிக்கெட்டை பகிர்ந்து பாதிக்கப்பட்டவர் சமூக வலைத்தளத்தில் புலம்பி தள்ளியுள்ளார். இந்த விவகாரத்தில் பார்க்கிங் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

  • 12 Aug 2025 04:31 PM (IST)

    Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலினுடன் கபில்தேவ் சந்திப்பு

    முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில்தேவ் தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

    உதயநிதி வெளியிட்ட பதிவு

  • 12 Aug 2025 04:15 PM (IST)

    மக்கள் நல்வாழ்வை பணயம் வைக்க வேண்டாம்.. அண்ணாமலை கடும் கண்டனம்!

    மக்கள் நல்வாழ்வை பணயம் வைக்கும் அலட்சியப் போக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும் என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். காலம் காலமாக பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கும் திமுக செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

  • 12 Aug 2025 04:01 PM (IST)

    மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு.. உதவி ஆணையர் கைது

    மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேட்டு வழக்கில் உதவி ஆணையர் சுரேஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றி வரும் நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

  • 12 Aug 2025 03:46 PM (IST)

    உயர்நீதிமன்ற வளாகத்தில் 15 வயது சிறுமி தற்கொலை முயற்சி

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் மாடியில் இருந்து 15 வயது சிறுமி கீழே விழுந்து தற்கொலை முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கு ஒன்றில் சிறுமியை அரசு காப்பகத்துக்கு அழைத்து செல்ல உத்தரவிடப்பட்ட நிலையில் சிறுமி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

  • 12 Aug 2025 03:24 PM (IST)

    16 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு!

    ரூ.30 கோடி மதிப்பிலான 14,846 கிலோ கஞ்சா, 2 கிலோ ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் செங்கல்பட்டு மருத்துவ கழிவுகளை எரியூட்டும் நிறுவனத்தில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழ்நாட்டில் பிடிபட்டவையாகும்.

  • 12 Aug 2025 03:10 PM (IST)

    கூலி படம் வெற்றியடைய வேண்டி மண்சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்!

    ஆகஸ்ட் 14ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு அப்படம் வெற்றியடைய வேண்டி மதுரையில் உள்ள ரஜினி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வேண்டிக் கொண்டனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 12 Aug 2025 02:53 PM (IST)

    பழனிக்கு வரும் பக்தர்களுக்கு அசௌகரியமான சூழல்… அன்புமணி கண்டனம்!

    பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் முருகப்பெருமான் வரலாறு என்ற புத்தகத்தை ரூ.2700 கொடுத்து கட்டாயப்படுத்தி வாங்க சொல்வதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். அந்த புத்தக்கத்தின் பெரும்பாலான பக்கம் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் சேகர்பாபு கருத்துகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  • 12 Aug 2025 02:40 PM (IST)

    வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மீது கமிஷனர் ஆபீஸில் புகார்!

    யூடியூப் பிரபலமாக திகழும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மீது சாதி மோதல்களை உருவாக்கும் நோக்கில் கருத்துக்களை தெரிவித்து வருவதாக கூறி நடிகை ஷகீலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 12 Aug 2025 02:23 PM (IST)

    ஓபிஎஸ் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார் – டிடிவி தினகரன்

    ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருகை தருவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுவரை பாஜக தரப்பில் இருந்து யாரும் அவரிடம் பேசியதாக தெரியவில்லை. டெல்லியில் உள்ள தலைவர்கள் ஓபிஎஸ் அழைத்து சமாதானம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • 12 Aug 2025 02:10 PM (IST)

    மீண்டும் லைசென்ஸ் கேட்ட டிடிஎஃப் வாசன்.. நீதிபதி போட்ட உத்தரவு

    மீண்டும் வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கக்கோரி டிடிஎஃப் வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். லைசென்ஸ் கோரி நீதிமன்றத்தைதான் நாட வேண்டிய அவசியம் இல்லை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகலாம் என கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

  • 12 Aug 2025 01:53 PM (IST)

    ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்ற இபிஎஸ் வலியுறுத்தல்

    2025ம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வானது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிறிஸ்தவர்களின் மிக முக்கிய நாளான கல்லறை திருநாளான அன்றைய தேதியில் வருவதால் தேர்வை வேறொரு தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

  • 12 Aug 2025 01:40 PM (IST)

    திருச்சியின் முன்னாள் மேயரான சுஜாதா மாரடைப்பால் மரணம்

    திருச்சியின் முன்னாள் மேயரான சுஜாதா மாரடைப்பால் காலமான செய்தி அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர் தற்போது 31வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வந்தார். சுஜாதா மறைவுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  • 12 Aug 2025 01:24 PM (IST)

    பாம்பு கடித்து 12 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சோகம்

    கும்பகோணம் அருகே கபிஸ்தலம் என்ற ஊரில் பாம்பு கடித்து 12 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு வீட்டில் சமையல் செய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 12 Aug 2025 01:08 PM (IST)

    கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் தீ

    சிங்கப்பூர் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரையிறங்கியபோது தீப்பிடித்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. விமானத்தின் 4வது இஞ்சினில் தீப்பிடித்த நிலையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

  • 12 Aug 2025 12:52 PM (IST)

    மாநிலம் அதிர மாநாட்டிற்கு தயாராவோம் – தவெக விஜய் அழைப்பு!

    தமிழக வெற்றிக் கழக மாநாடு மதுரையில் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மாநிலம் அதிர மாநாட்டிற்கு தயாராகுவோம் என விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் படிக்க

  • 12 Aug 2025 12:35 PM (IST)

    சென்னை மாநகராட்சியின் உத்தரவாதம்.. போராட்ட குழு ஏற்க மறுப்பு!

    ஒப்பந்தம் தனியாருக்கு கொடுக்கப்பட்டாலும், தற்போதைய தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என  சென்னை மாநகராட்சியின் பல உத்திரவாதங்களை ஏற்க போராட்ட குழுவினர் மறுத்துள்ளனர். பணி நிரந்தரம் செய்யாமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

  • 12 Aug 2025 12:22 PM (IST)

    ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க குன்றத்தூர் அபிராமி மனு!

    திருமணத்தை மீறிய உறவால் இரு குழந்தைகளை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் குன்றத்தூர் அபிராமி, தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  • 12 Aug 2025 12:09 PM (IST)

    DMDK Vijayakanth: விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்த நிபந்தனை..

    கேப்டன் விஜயகாந்த் தான் எங்கள் மானசீக குரு என சொல்லிவிட்டு அவரின் புகைப்படத்தை பயன்படுத்தினால் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என பிரேமலதா தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் விஜயகாந்தின் மானசீக குரு என்பதால் தான் அவரின் புகைப்படத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம் என விளக்கம் கொடுத்துள்ளார்.

  • 12 Aug 2025 11:55 AM (IST)

    வீடு தேடி ரேஷன் பொருட்கள்.. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடக்கம்..!

    முதலமைச்சரின் தாயுமானவர் என்ற திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாதமும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 12 Aug 2025 11:40 AM (IST)

    நீலகிரியில் மாடுகளை வேட்டையாடிய புலி.. பிடிக்கும் பணி தீவிரம்

    நீலகிரி மாவட்டம் தேவர்சோலா பகுதியில் 13 வளர்ப்பு மாடுகளை வேட்டையாடிய புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனிடையே முதுமலையில் இருந்து விஜய் மற்றும் வசீம் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

  • 12 Aug 2025 11:24 AM (IST)

    சென்னையில் ஏசி மின்சார பேருந்து சேவை.. எங்கெங்கு தெரியுமா?

    சென்னையில் முதல்முறையாக ஏசி மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – திருவான்மியூர், கிளாம்பாக்கம் – சோழிங்கநல்லூர், தி.நகர் – திருப்போரூர், சென்னை விமான நிலையம் – சிறுசேரி,கோயம்பேடு பேருந்து நிலையம் – கேளம்பாக்கம் உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 12 Aug 2025 11:10 AM (IST)

    சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 6.71 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

    சிங்கப்பூரில் இருந்து கோயம்புத்தூருக்கு நேற்றிரவு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6.71 கிலோ ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா சுங்கத்துறை அதிகாரியால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதே விமானத்தில் 19 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்தி வந்த இருவரும் சிக்கினர்.

  • 12 Aug 2025 10:53 AM (IST)

    செங்கள் சூளையில் வேலை பார்த்து இளைஞர் கொலை.. சிறுமி கைது!

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே செங்கள் சூளையில் வேலை பார்த்து வந்த 23 வயது இளைஞரை, அங்கு வேலைப் பார்த்து வந்த 16 வயது வடமாநில சிறுமி அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க

  • 12 Aug 2025 10:38 AM (IST)

    ஆணவ கொலைக்கு தனிச்சட்டம்.. டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

    2011 ஆம் ஆண்டு முதல் ஆணவ கொலைக்கு தனிச்சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். அப்போது இதுபற்றி பேசிய போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்போம் எனவும் கூறியுள்ளார்.

  • 12 Aug 2025 10:22 AM (IST)

    தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. சென்னை மாநகராட்சி கோரிக்கை!

    சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படியான நிலையில்  தூய்மை பணியாளர்கள் பணி பாதுகாப்பு, பணப்பலன்கள் ஆகியவை உறுதி செய்யப்படும் எனவும், போராட்டத்தை கைவிடுமாறும் சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

  • 12 Aug 2025 10:07 AM (IST)

    பாஸ் அடிப்படையில் அனுமதி

    தவெக மாநாட்டில் குழந்தைகள் ,கர்ப்பிணிகள், வயதானவர்களுக்கு அனுமதி கிடையாதுமாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்கள் பாஸ் அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    முழு விவரம்

  • 12 Aug 2025 09:55 AM (IST)

    TVK Meeting : 42 கேள்விகள் – எழுத்துப்பூர்வமாக பதில்

    காவல்துறை தரப்பில் 42 கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்காக தவெக சார்பில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள நிலையில், தற்போது அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையில் மாநாடு நடைபெறவுள்ளது

  • 12 Aug 2025 09:45 AM (IST)

    தமிழக வெற்றிக் கழக மாநாடு வேலைகள் தீவிரம்

     ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.

  • 12 Aug 2025 09:22 AM (IST)

    கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

    சிறுவனை தாக்கி கொன்ற சிறுத்தையை கூண்டு அமைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளன. இதற்கிடையே கேமரா பொருத்தியும், ட்ரோன் உதவியுடனும் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறை ஆராய்ந்து வருகிறது

    விரிவாக படிக்க

  • 12 Aug 2025 09:12 AM (IST)

    Covai Crime News: சிறுத்தை தாக்கி சிறுவன் பலி

    கோவை மாவட்டம் வால்பாறையில் 8 வயது சிறுவன் சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். வட மாநில தம்பதியின் மகனான நூர்சல் ஹக் சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

  • 12 Aug 2025 08:58 AM (IST)

    10 நாட்களுக்கு மேலாக நடக்கும் போராட்டம்

    10 நாட்களுக்கு மேலாக பெருநகர சென்னை மாநகராட்டியின் தலைமையகமான ரிப்பன் கட்டிடத்தின் முன் போராட்டம் நடைபெறுகிறது. ராயப்புரம் மற்றும் திருவிக மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மையை தனியார்மயமாக்கும் நகராட்சியின் முடிவை ரத்து செய்யக் கோரிஇந்த போராட்டம் நடக்கிறது

  • 12 Aug 2025 08:47 AM (IST)

    துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம் – இன்று விசாரணை

    சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மையை தனியார்மயமாக்கியதற்கு எதிராக  துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது

  • 12 Aug 2025 08:33 AM (IST)

    ஆழ்வார்பேட்டை சர்வீஸ் ரோடு விவரம்

     TTK சாலை (Outgoing)-ல் ஆழ்வார்பேட்டை நோக்கி மாநகர பேருந்துகள் கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்திற்கு பதிலாக சர்வீஸ் சாலையை பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம்

    விரிவாக படிக்க

  • 12 Aug 2025 08:20 AM (IST)

    ஆழ்வார்பேட்டை ரூட் விவரம் இதோ

     இலகுரக வாகனங்கள் மட்டும் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. TTK சாலை (Incoming)-ல் மியூசிக் அகாடமி நோக்கி வரும் MTC பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலையை பயன்படுத்தி ஆழ்வார்பேட்டை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி முர்ரேஸ் கேட் சாலை வழியாக சென்று வலதுபுறம் திரும்பி சேஷாத்ரி சாலை மற்றும் கஸ்தூரி ரங்கன் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

  • 12 Aug 2025 08:10 AM (IST)

    சென்னையில் ரூட் மாற்றம்.. விவரம் இதோ

    சென்னையில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழிச்சாலை ஆக மாற்றப்பட்டு, கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது

  • 12 Aug 2025 07:56 AM (IST)

    ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள்

    அதன்படி, 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் . ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    மேலும் படிக்க

  • 12 Aug 2025 07:45 AM (IST)

    Special Bus Updates : தொடர் விடுமுறையால் சிறப்பு பேருந்துகள்

    சுதந்திர தினத்தை ஒட்டிய தொடர் விடுமுறையை என்பதால், தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயணம் செய்ய ஏதுவாக இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது

  • 12 Aug 2025 07:32 AM (IST)

    கடற்பகுதி காற்று.. மீனவர்களுக்கான எச்சரிக்கை!

    ஆகஸ்ட் 15ம் தேதி வரை தமிழக கடலோர பகுதிகள், வங்கக் கடல் பகுதிகள், அரபிக் கடல்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மி வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

    விரிவாக படிக்க

  • 12 Aug 2025 07:17 AM (IST)

    Chennai Rains : சென்னை வானிலை நிலவரம்.. மழை உண்டா?

    ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 12ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்தடுன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • 12 Aug 2025 07:03 AM (IST)

    நாளை எங்கெல்லாம் மழை?

    ஆகஸ்ட் 13ஆம் தேதியான நாளை வட மாவட்டங்களான திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கேரள எல்லை மாவட்டமான நீலகிரி, கோவை  ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 12 Aug 2025 07:02 AM (IST)

    Tamil Nadu Weather Today : 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    ஆகஸ்ட் 12ஆம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Published On - Aug 12,2025 6:58 AM