தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கும் அபாயம்: பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?
Tamil Nadu Lightning Alert : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை (Northeast Monsoon) தீவிரமடைந்துள்ள நிலையில், ராணிப்பேட்டை, ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பூர், திருவள்ளூர், சேலம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் இடி, மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
சென்னை, அக்டோபர் 24 : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை (Northeast Monsoon) தீவிரமடைந்துள்ள நிலையில், ராணிப்பேட்டை, ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பூர், திருவள்ளூர், சேலம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் இடி, மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடி மின்னல் தாக்கும் அபாயம் உள்ள மாவட்டங்கள்
1. ராணிப்பேட்டை,
2. ஈரோடு,
3. திருவண்ணாமலை,
4. திருப்பூர்,
5. திருவள்ளூர்,
6. சேலம்,
7. கடலூர்
தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில், தற்போது வடகிழக்குப் பருவமழை மாநிலம் முழுவதும் பரவலாகப் பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி, உள் மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 24, 2026 இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.




குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி ஆகிய 33 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : விரைவில் 5 தொகுதி இடைத்தேர்தல்.. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை..
மின்னலின்போது என்ன செய்ய வேண்டும்?
- திறந்தவெளி மைதானங்கள், வயல்வெளிகள், உயரமான மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
- மரத்தின் கீழ் ஒதுங்குவது மிக ஆபத்தானது. ஏரி, குளம், கடற்கரை போன்ற நீர்நிலைகளிலிருந்து உடனடியாக விலகிச் செல்ல வேண்டும்.
- உடனடியாகக் கான்கிரீட் கட்டடங்களுக்குள் சென்று தஞ்சமடைய வேண்டும். மேற்கூரை மூடிய கார், பேருந்து போன்ற வாகனங்களுக்குள் இருப்பதும் பாதுகாப்பானது.
- பாதுகாப்பான இடம் இல்லையென்றால், தரையில் குந்தியபடி அமர்ந்து, இரு கால்களையும் சேர்த்து வைத்து, தலையைக் குனிந்து கொள்ள வேண்டும். தரையில் படுக்கக் கூடாது.
- இரும்புக் கம்பிகள், வேலிகள், மின்கம்பங்கள், மின்கம்பிகள் அருகே செல்லக் கூடாது.
- வீட்டில் தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர், கணினி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.
- தேவைப்பட்டால் அவற்றின் மின் இணைப்பைத் துண்டித்து வைக்கலாம். ஜன்னல், கதவுகளின் அருகே நிற்பதைத் தவிர்க்கலாம்.
- குழாய் நீரில் குளிப்பது, பாத்திரம் கழுவுவது போன்றவற்றை இடி, மின்னல் ஓயும் வரை தள்ளிப்போடலாம்.
வயல்களில் வேலை செய்யும் விவசாயிகள், கால்நடைகளை மேய்ப்போர், மீனவர்கள் ஆகியோர் இடி, மின்னல் அபாயம் அதிகம் உள்ளவர்கள். வானம் கருமேகங்களுடன் இருட்டத் தொடங்கியவுடனே பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட வேண்டும். கால்நடைகளையும் மரங்களின் கீழ் கட்டி வைக்காமல், கொட்டகைகளுக்குள் அடைக்க வேண்டும்.
இதையும் படிக்க : காப்பகத்தில் இருந்து 2 சிறுமிகள் எஸ்கேப்.. கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி.. புழல் போலீசார் விசாரணை!
‘தாமினி’ செயலி
மின்னல் தாக்கும் அபாயம் குறித்த முன்னெச்சரிக்கையை அறிந்துகொள்ள, மத்திய அரசின் ‘தாமினி’ கைப்பேசி செயலியைப் பயன்படுத்தலாம். உங்கள் இருப்பிடத்துக்கு அருகே மின்னல் தாக்கும் வாய்ப்பு இருந்தால், அது முன்கூட்டியே எச்சரிக்கை தரும்.