அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் எப்போது? தமிழக அரசு முக்கிய உத்தரவு..
Bank Strike: அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தொடர் பொது விடுமுறை நாட்களும் வருவதால், சம்பளம் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கான செப்டம்பர் மாத சம்பளத்தை செப்டம்பர் 25-ஆம் தேதியே வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
செப்டம்பர் 25, 2026: தமிழக அரசு ஊழியர்களுக்கான செப்டம்பர் மாத சம்பளத்தை வழக்கமான தேதிக்கு முன்னதாக, செப்டம்பர் 25-ஆம் தேதியே வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கான சம்பளம் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செப்டம்பர் மாத இறுதியில் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு இன்றே சம்பளம்:
இதனுடன் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தொடர் பொது விடுமுறை நாட்களும் வருவதால், சம்பளம் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கான செப்டம்பர் மாத சம்பளத்தை செப்டம்பர் 25-ஆம் தேதியே வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அனைத்து துறைத் தலைவர்களுக்கும் தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக செலவழித்தது இத்தனை கோடியா?.. தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் சமர்ப்பித்த பகீர் கணக்குகள்!
அந்தக் கடிதத்தில், தமிழக அரசின் வாரியங்கள், மாநகராட்சிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சம்பளம் வழங்கும் அலுவலர்கள், இந்த மாதத்திற்கான சம்பளம் மற்றும் இதர பட்டுவாடாக்களுக்கான பில்களைத் தயாரித்து செப்டம்பர் 25-ஆம் தேதியே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்:
செப்டம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களில் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வழக்கமான வங்கி சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், செப்டம்பர் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சில வங்கிகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மத்திய அரசு ஊழியர்களுக்கான செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை செப்டம்பர் 25-ஆம் தேதியே வழங்க மத்திய அரசும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் செப்டம்பர் மாத ஓய்வூதியம் அன்றே வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு.. சாந்தி, மகேந்திர சிம்மனிடம் விடிய விடிய போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை!
செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரையிலான வங்கி வேலைநிறுத்தம் மற்றும் அக்டோபர் 2 முதல் 4-ஆம் தேதி வரையிலான தொடர் விடுமுறை நாட்களால் வங்கிகளின் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். இதனால், வங்கி தொடர்பான சேவைகளை பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.