AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘பாரதியார் இல்லம்’ பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் பக்கம் – தமிழக அரசு அறிவிப்பு

Bharathiyar Illam” Instagram Page: மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல தமிழக அரசு ‘பாரதியார் இல்லம்’ என்ற பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியுள்ளது. பெண்களின் உரிமை மற்றும் சமத்துவத்தை வலியுறுத்திய பாரதியாரின் பங்களிப்பு குறித்து அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பாரதியார் இல்லம்’ பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் பக்கம் – தமிழக அரசு அறிவிப்பு
பாரதியார் Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 07 Mar 2026 12:18 PM IST

தமிழக அரசு செய்தித் துறையின் மூலம் ‘பாரதியார் இல்லம்’ என்ற பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் வலைதள பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் உரிமை, சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கான சம உரிமை பல நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு எதிராக முதன்முதலில் பெண்ணுரிமை குறித்து உரத்த குரலில் கவிதைகள் பாடியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியத்தில் பாரதியாரின் சிறப்பு

தமிழ் மொழியின் பெருமைமிகு கவிஞர்களில் முன்னணியில் திகழ்பவர் பாரதியார். 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்த அவர், சிறுவயதிலேயே தனது கவித்திறனால் “பாரதி” என்ற பட்டத்தை பெற்றார். கவிஞராக மட்டுமல்லாமல் விடுதலைப் போராட்ட வீரராகவும், சமூகச் சீர்திருத்தவாதியாகவும், பெண்கள் விடுதலைக்காக குரல் கொடுத்த முன்னோடியாகவும் அவர் திகழ்ந்தார். தேசிய உணர்வை எழுப்பிய அவரது கவிதைகள் தேசபக்தி, சமத்துவம், பெண்மையின் பெருமை, சாதி ஒழிப்பு மற்றும் மனிதநேயம் போன்ற உயரிய சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன.

பிரபலமான பாடல்கள் மற்றும் சிந்தனைகள்

“அச்சமில்லை அச்சமில்லை”, “எண்ணிய முடிதல் வேண்டும்”, “சின்னஞ்சிறு கிளியே”, “வந்தே மாதரம்” போன்ற அவரது பாடல்கள் இன்றும் இளைஞர்களுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் அளித்து வருகின்றன. தமிழின் இனிமையையும் வீரத்தையும் இணைத்து எழுதியவர் பாரதியார். சமூக அநீதிகளுக்கு எதிராக உரத்த குரலில் முழங்கிய அவரது சிந்தனைகளும் படைப்புகளும் காலத்தைக் கடந்து இன்றைய தலைமுறைக்கும் வழிகாட்டியாக திகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “திருச்சி குலுங்கட்டும்… திமுக வெல்லட்டும்” – தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பாரதியார் வாழ்ந்த இல்லங்கள் நினைவிடங்களாக

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தனது இறுதி நாட்களில் 1920 முதல் 1921 வரை சென்னை திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவில் அருகே உள்ள வீட்டில் வசித்தார். இன்றைய தலைமுறையினர் பாரதியாரின் சிறப்பையும் வாழ்க்கை வரலாறையும் அறிந்து பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு செய்தித் துறையின் மூலம் அந்த இல்லத்தை ‘பாரதியார் நினைவு இல்லமாக’ பராமரித்து வருகிறது. அதேபோல் எட்டயபுரம் மற்றும் வாரணாசியில் அவர் வாழ்ந்த இல்லங்களும் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அரிய புகைப்படங்கள் மற்றும் வரலாற்று குறிப்புகள்

இந்த நினைவு இல்லங்களில் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு, முக்கிய தலைவர்களுடன் இருக்கும் அரிய புகைப்படங்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய பல முக்கிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நூற்றாண்டின் மகத்தான கவிஞர் வாழ்ந்த இல்லங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருவதோடு, அவரது சிந்தனைகள் குறித்து அறிந்து பயனடைந்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்காக தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம்

மகாகவி பாரதியார் குறித்த தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் இன்றைய இளைஞர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் ‘பாரதியார் இல்லம்’ என்ற பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பாரதியாரின் கவிதைகள், அரிய வரலாற்றுக் குறிப்புகள், அரிதாகக் கிடைக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தொடர்ந்து பதிவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் இன்றைய தலைமுறையினர் அனைவரும் இந்தப் பக்கத்தை பின்தொடர்ந்து பயன்பெறுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Follow Us