எந்தெந்த நாட்களில் விடுமுறை? டாஸ்மாக் பார்களுக்கான விதிகளில் புதிய திருத்தம் – வெளியான அறிவிப்பு
New Rules for TASMAC Bars : டாஸ்மாக் பார்களுக்கான விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குறிப்பாக 21 வயதுக்குள் இருப்பவர்களுக்கு மதுபானம் விற்கவோ பணியமர்த்தவோ கூடாது, 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும், டாஸ்மாக் பார்களில் மதுபானம் விற்கக் கூடாது உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை, நவம்பர் 26 : டாஸ்மாக் பார்களுக்கான விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குறிப்பாக 21 வயதுக்குள் இருப்பவர்களுக்கு மதுபானம் விற்கவோ பணியமர்த்தவோ கூடாது, 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும், டாஸ்மாக் (TASMAC) பார்களில் மதுபானம் விற்கக் கூடாது உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
டாஸ்மாக் பார்களுக்கான விதிகளில் திருத்தம்
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்களுக்கான விதிகளில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தங்களை செய்து வெளியிட்டுள்ளது. அதன் படி டாஸ்மாக் கடைகளை ஒட்டியோ அல்லது கடையிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள்ளோ மட்டுமே பார்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும், மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் கோயில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து 50 மீட்டர் தொலைவிற்குள் மதுபான பார்கள் செயல்படுத்தக் கூடாது.
இதையும் படிக்க : குழந்தைகளை காட்டில் விட்டு சென்றனரா பெற்றோர்? வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த கலெக்டர்!




பிற பகுதிகளில் இந்தத் தூரம் 100 மீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வணிக மற்றும் தொழில் பகுதிகளுக்கு இந்தத் தூர விதி பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக ஹோட்டல் வளாகங்களுக்குள் பார்கள் அமைக்கவும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார் டெண்டர் முறையில் மாற்றம்
அதனைத் தொடர்ந்து பார் நடத்துவதற்கான அங்கீகாரம் டெண்டர் முறையில் தனியாருக்கு வழங்கப்படும் என்றும், டெண்டர் தொகையில் ஒரு சதவிகிதத்தை டாஸ்மாக் நிறுவனம் கமிஷனாக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையை , அடுத்த மாதம் 25 ஆம் தேதிக்குள் அரசிடம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தினமும் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது . மேலும், 21 வயதுக்குக் குறைவானவர்கள் பார்களுக்குள் நுழையவோ அல்லது அங்கு பணியில் அமர்த்தப்படவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தெந்த நாட்களில் விடுமுறை?
திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்தநாளுக்கு முந்தைய நாள், வள்ளலார் நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம் ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளும் பார்களும் கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பார் நடத்துபவர்கள் பார்களுக்குள் மதுபானங்களை இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பரிமாறவோ கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபானத்தை மட்டுமே பாருக்குள் அமர்ந்து அருந்த அனுமதி உண்டு. பார்களுக்கு வெளியே திறந்தவெளியில் மது அருந்துவதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தலா ரூ.1 லட்சம் வரை மானியம்… பால் பண்ணைகள் அமைக்க மானியம் வழங்கும் தமிழக அரசு – யாருக்கு கிடைக்கும்?
முன்னதாக ஒரே டாஸ்மாக் கடையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாகப் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கட்டாயமாகப் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும் நவம்பர் 25, 2026 அன்றுக்குள் பணியிட மாற்ற உத்தரவுகளை வழங்கவும் குறிப்பிடப்பட்டிருந்தது.