இனி அரசு சேவைகள் வாட்ஸ்அப் மூலம் பெறலாம்.. நம்ம அரசு நம்ம கையில் திட்டத்தை எப்படி பயன்படுத்துவது?
பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வாட்ஸ் அப் மூலமாக எளிதாக பெற இந்த திட்டம் வழிவகை செய்கிறது. இதைத் தவிர, மின்கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி, தொழில்வரி, தொழில் உரிமம் உள்ளிட்ட சேவைகளையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2, 2026: தமிழக அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், “நம்ம அரசு நம்ம கையில்” என்ற புதிய அதிநவீன வாட்ஸ் அப் சேவை திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், 20 முக்கிய அரசுத் துறைகளின் கீழ் உள்ள 66 சேவைகளை பொதுமக்கள் எங்கிருந்தும் ஆன்லைன் வாயிலாக பெற்றுக்கொள்ள முடியும். தமிழக அரசுத் துறைகளின் சேவைகளை பெறுவதற்கு ஏற்கனவே ஆன்லைன் வசதிகள் இருந்து வருகின்றன. மேலும், அரசு இ-சேவை மையங்களும் தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் உள்ளன. தனியார் இ-சேவை மையங்களும் சேவைகளை வழங்கி வருகின்றன.
மக்கள் அரசு தொடர்பான சேவைகளை இந்த மையங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் நிலையில், பல நேரங்களில் காத்திருக்க வேண்டிய சூழலும் நிலவுகிறது. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்கான சான்றிதழ்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
“நம்ம அரசு நம்ம கையில்”:
இந்த நிலையை மாற்றுவதற்காகவே தமிழக அரசு இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நேரடியாக அரசுத் துறைகளின் சேவைகளை பெறும் வகையில் “நம்ம அரசு நம்ம கையில்” வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழக அமைச்சரவையில் முதலிடம் யாருக்கு? அரசு பொதுத்துறை வெளியிட்ட சீனியாரிட்டி பட்டியல்!
இந்த சேவையை எப்படி பெறுவது?
அரசின் 20 துறைகளின் கீழ் உள்ள 66 சேவைகள் இதன் மூலம் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கும். 78452 52525 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு “வணக்கம்” அல்லது “Hi” என பதிவு செய்து இந்த சேவையை பயன்படுத்தலாம்.
குறுஞ்செய்தியை அனுப்பிய பிறகு, தமிழில் சேவையை பெற “T” என்ற எழுத்தையும், ஆங்கிலத்தில் சேவையை பெற “E” என்ற எழுத்தையும் பதிவு செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து எந்தத் துறையின் சேவை வேண்டும் என்பதை தேர்வு செய்தால், அதற்கான சேவைகளை எளிதாக பெற முடியும்.
மேலும் உதவி தேவைப்பட்டால், 1800 425 6000 என்ற டோல் ஃப்ரீ எண்ணை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 துறைகளை சேர்ந்த 66 சேவைகள்:
பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வாட்ஸ் அப் மூலமாக எளிதாக பெற இந்த திட்டம் வழிவகை செய்கிறது. இதைத் தவிர, மின்கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி, தொழில்வரி, தொழில் உரிமம் உள்ளிட்ட சேவைகளையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் தாங்கள் விண்ணப்பித்துள்ள மனுக்களின் நிலையை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் இந்த வசதி உதவும். இதன் மூலம் அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் பொதுமக்களுக்கு பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“நம்ம அரசு நம்ம கையில்” திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
இந்த திட்டத்தின் மூலம் கீழ்க்கண்ட துறைகளின் சேவைகளை பெற முடியும்:
• வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
• சென்னை மெட்ரோ ரயில்
• குடிநீர் வழங்கல் வாரியம்
• வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
• நகராட்சி நிர்வாக இயக்குநரகம்
• அரசு தேர்வுகள் இயக்ககம்
• கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம்
• சமூக நலத்துறை
• ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
• பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை
• பேரூராட்சிகள் இயக்ககம்
• சென்னை மாநகராட்சி
• இந்து சமய அறநிலையத் துறை
• பதிவுத்துறை
• “உங்கள் பகுதியை அறிந்து கொள்ளுங்கள்” சேவை
• முதலமைச்சரின் முகவரி திட்டம்
• கல்வி உதவித்தொகை சேவைகள்
• தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்
• தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
• தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்