நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை தவெக அரசு முன்னெடுக்கவேண்டும்.. மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin Expressed NEET Exam : நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு ரத்து விவகாரத்தில் நீட்டுக்கு எதிரான நிலைப்பாட்ட தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3- ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. சுமார் 552 நகரங்கள், வெளிநாடுகளில் 14 இடங்களில் என மொத்தம் 5 ஆயிரத்து 432 மையங்களில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் ஜூனில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக கூறப்படுகிறது. நீட் தேர்வு நடைபெறுவதற்கு சுமார் மூன்று நாட்களுக்கு முன்பு வினாத்தாள் கசிந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் நீட் நுழைவு தேர்வு ரத்து
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் நாடு முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவு தேர்வை தேசிய தேர்வுகள் முகமை இன்று திங்கள்கிழமை திடீரென ரத்து செய்தது. இதனால், நீட் தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் மற்றும் தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் தரப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க: 26 மணி நேரத்தில் 3 கொலைகள்.. பகீர் கிளப்பிய சைக்கோ கில்லர்.. என்கவுண்டர் செய்த உபி போலீஸ்




நீட் தேர்வில் மோசடி இல்லை நீட் தேர்வே மோசடி தான்
அதில், இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்து முறைகேடுகள் வெளியானதை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். ஒரு தேர்வின் ஒவ்வொரு படி நிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் தேர்வு இருந்து வருகிறது. நான் உள்பட பலர் கூறி வருவது போல நீட் தேர்வு மோசடி அல்ல. நீட் தேர்வே ஒரு மோசடிதான். ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநிலம் மருத்துவ கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வு முறை ஒழிக்கப்பட வேண்டும்.
நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை தவெக முன்னெடுக்க வேண்டும்
மீண்டும் நீட் தேர்வு நடத்துவதன் காரணமாக ஏற்படும் தாமதம் மாணவர்களின் உயர்கல்வி கனவில் பல்வேறு குழப்பங்களை மட்டுமே ஏற்படுத்தும். இதனால், பழைய முறைப்படி 12- ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் புதிதாக அமைந்திருக்கும் தவெக அரசு நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விளக்கு போகிறோம் திமுக சட்ட நடவடிக்கைகளை புதிய அரசு கையில் எடுத்து வெற்றி பெற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: வினாத்தாள் கசிவு- மே 3ல் நடந்த நீட் (யுஜி) தேர்வு 2026 செல்லாது என அறிவிப்பு