சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!
CM Vijay Seeks Supreme Court Bench : சென்னையில் உச்சநீதிமன்றத்தின் நிரந்தர கிளையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து தென்மாநில மக்களும் பயனடைவார்கள் என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, நவம்பர் 5 : சென்னையில் உச்சநீதிமன்றத்தின் நிரந்தர கிளையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தென்னிந்திய மாநில மக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர டெல்லி வரை பயணம் செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும், சென்னையில் உச்சநீதிமன்றதத்தின் (Supreme Court) கிளை அமைக்கப்பட்டால் தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து தென்மாநில மக்களும் பயனடைவார்கள் என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
உச்சநீதிமன்றத்தின் கிளை தமிழ்நாட்டில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.இந்த நிலையில், இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு அதிக நேரமும் பணமும் செலவிட வேண்டிய சூழல் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் திமுக பிரமுகர் படுகொலை.. 1 மணி நேரத்தில் 3 பேர் அதிரடி கைது.. திண்டுக்கல்லில் பரபரப்பு!!




இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 130ன் படி உச்சநீதிமன்றம் டெல்லியிலோ அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்தியத் தலைமை நீதிபதி அவ்வப்போது முடிவுசெய்யும் பிற இடத்திலோ அல்லது இடங்களிலோ அமைந்திருக்க வழிவகை செய்கிறது என்று அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது கடிதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் குழு, சட்ட அறிவும், வாதத் திறமையும் கொண்ட சட்ட வல்லுநர்களைக் கொண்டுள்ளதால், சென்னையில் அமைக்கப்படும் உச்சநீதிமன்றக் கிளையின் தேவைகளை நிறைவு செய்யும். சென்னை உயர்நீதிமன்றமானது 1862ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட நாட்டின் மிகத் தொன்மையான முன்னுரிமை உயர்நீதிமன்றங்களில் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது, ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடின்றி நாட்டின் அனைத்துக் குடிமக்களும் நீதிமன்றத்தை நேரடியாக அணுகும் வாய்ப்பைப் பெறவேண்டும் என்றே அதனை உருவாக்கிய சான்றோர்கள் விரும்பினர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1980 முதல் முன்வைக்கப்படும் கோரிக்கை
சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை அமைப்பது நமது நாட்டின் உண்மையான கூட்டாட்சித் தன்மையை வெளிப்படுத்தும் என்றும், 2004, 2006, 2008 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் இவை தொடர்பாக அளித்த பரிந்துரைகள், உச்சநீதிமன்றத்தின் நிரந்தர மண்டலக் கிளைகளின் தேவையைத் தொடர்ந்து வலியுறுத்தும் சட்ட ஆணையங்களின் அறிக்கைகள் மற்றும் இத்தகைய கிளைகளின் முழுமையான நிர்வாகக் கட்டுப்பாடு இந்தியாவின் தலைமை நீதிபதி அவர்களிடமே உள்ளதால், அவை நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்காது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : TNPSC Group 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் எது? விண்ணப்பிக்கத் தவறாதீர்கள்
கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் முன்வைக்கப்பட்டு வரும் சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய முதல்வர் விஜய் கடிதம், தென்னிந்திய மக்களுக்கு நீதியை அணுகுவதற்கான வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் இந்தக் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து சாதகமான முடிவு எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.