சாதிய பிடிவாதத்தின் கோர முகம்.. இருவீட்டார் சம்மதித்தும் தம்பதியை ஊரை விட்டு ஒதுக்கிய கிராம நிர்வாகிகள்!!
Intercaste Marriage Outrage: ராமநாதபுரம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியின் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து ரூ.50,000 அபராதம் கேட்டு மிரட்டிய கிராம நிர்வாகிகளுக்கு எதிராகக் குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம், நவ.05: காலங்கள் எவ்வளவோ மாறிவிட்டாலும், கிராமப்புறங்களில் இன்னும் சில பகுதிகளில் சாதியக் பிடிவாதமும் தீண்டாமைச் சிந்தனைகளும் மாறாமல் தொடர்கிறது என்பதற்குச் சாட்சியாகச் சமீபகாலச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள லட்சுமிபுரம் மேலத்தெரு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். பி.வி.ஏ. பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், பாம்பன் தெற்குவாடியைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான சங்கீதாவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் தங்களது காதலை இருவீட்டாரிடம் தெரிவிக்க, பெற்றோரின் முழு சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி மிகச் சிறப்பாகத் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதையும் படிக்க: தீபாவளி பண்டிகை.. சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.. தமிழக அரசு அதிரடி ஏற்பாடு!!
கிராம நிர்வாகிகளின் கொடூரப் போக்கு:
பொதுவாகக் கிராமங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்தும்போது ஊர் மக்களை முறையாக அழைத்து மரியாதை செய்வது வழக்கம். அதன்படி கார்த்திக் குடும்பத்தினரும் தங்களது திருமணத்திற்கு ஊர் மக்களை நேரில் அழைத்துள்ளனர். ஆனால், இது ஒரு கலப்புத் திருமணம் என்பதால், பெண் வீட்டார் தரப்பு உறவினர்கள் கலந்துகொண்ட போதிலும், மாப்பிள்ளை வீட்டுத் தரப்பு உறவினர்களைத் தவிர ஊர் மக்கள் எவரும் அத்திருமணத்திற்குச் செல்லவில்லை. அதுமட்டுமின்றி, திருமணத்திற்குச் சென்ற சொந்தபந்தங்களையும் தனிமைப்படுத்தி ஊர் நிர்வாகிகள் மிரட்டியுள்ளனர். திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்தும் கார்த்திக் குடும்பத்தினரை ஊருக்குள் சக மனிதர்களாக நடத்தாமல், சமூக ரீதியாகப் புறக்கணித்துத் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
தாயின் கண்ணீரும் மன உளைச்சலும்:
தங்களது குடும்பத்தை மீண்டும் ஊர்க் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டுமெனில் உடனடியாக ரூ.50,000 அபராதம் செலுத்த வேண்டும் என ஊர் நிர்வாகிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர். தங்களால் அவ்வளவு பணம் கொடுக்க இயலாது என்றும், ரூ.25,000 தருவதாகவும் கார்த்திக் பெற்றோர்கள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டும், அதை ஏற்க மறுத்த கிராமத் தலைவர்கள் முழுத் தொகையையும் கட்டியே தீர வேண்டும் என மிரட்டியுள்ளனர். ஊர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவோ, மற்றவர்களுடன் பேசவோ அனுமதிக்காமல் தங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும், இது குறித்துக் கேட்கச் சென்றபோது ஊர் மக்கள் தங்களைத் தாக்க முயன்றதாகவும் கார்த்திக்கின் தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை.. கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி மிரட்டல்.. தென்காசியில் மாணவர் உள்பட இருவர் கைது!
புகாரும் அவசியமான நடவடிக்கையும்:
தொடர்ந்து ஊர் மக்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி நிம்மதியை இழந்துவிட்டதாகக் கூறி, கார்த்திக் மற்றும் அவரது பெற்றோர் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷிடம் நேரில் சந்தித்து முறைப்படி புகார் மனு அளித்துள்ளனர். காதல் திருமணம் செய்துகொள்வது தனிமனித உரிமை என்றபோதிலும், சாதியக் வெறியின் காரணமாக ஒரு குடும்பத்தைச் சமூகப் புறக்கணிப்பு செய்வது மற்றும் கட்டாயப் பணம் வசூலிப்பது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் ஊர் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.