Tamil Nadu Assembly: பட்ஜெட் மீதான விவாதம்.. பல்வேறு பிரச்சனைகளை பேச எதிர்க்கட்சிகள் திட்டம்..
TN Assembly: பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடங்கவுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, மேகதாது அணை விவகாரம், விவசாயிகள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்ட் 7, 2026: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான ஆகஸ்ட் 5ஆம் தேதி 2026–27ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடங்குகிறது. இதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பட்ஜெட் தொடர்பாக தங்களது கருத்துகளை பதிவு செய்ய உள்ளனர்.
இரங்கல் தீர்மானம் முதல் கேள்வி நேரம் வரை:
இன்றைய அவை நடவடிக்கைகள் தொடக்கத்தில், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, அண்மையில் மறைந்த முக்கிய பிரபல்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். பின்னர் கேள்வி நேரம் நடைபெறும்.
கேள்வி நேரம் நிறைவடைந்ததும், 2026–27ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கும். விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர்.
அடுத்த இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் தொடரும். ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் இறுதி நாளில், பட்ஜெட் விவாதத்திற்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் பதிலுரை வழங்க உள்ளனர்.
துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்:
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. முதல் நாளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்களுக்கான துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.
மேலும் படிக்க: தொகுதி மறுசீரமைப்பு – தமிழக எம்பிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசிக்கவுள்ளதாக அறிவிப்பு
பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடங்கவுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, மேகதாது அணை விவகாரம், விவசாயிகள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட்டில் பெரிய அளவிலான மக்கள் நலத் திட்டங்களோ, விவசாயிகளுக்கான குறிப்பிடத்தக்க அறிவிப்புகளோ இடம்பெறவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதனால், மாநிலத்தின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சட்டப்பேரவையில் கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சியினர் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.