3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. 12 ஆம் தேதி வரை நீடிக்கும் மழை..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 7, 2026: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று (ஆகஸ்ட் 7) கோயம்புத்தூர், தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுடன் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
12 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு:
ஆகஸ்ட் 8ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆகஸ்ட் 9 முதல் 12ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை எப்படி இருக்கும்?
வெப்பநிலையைப் பொறுத்தவரை, கடந்த இரண்டு நாட்களாக வெப்பத்தின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. வரவிருக்கும் நாட்களிலும் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது; இயல்பை ஒட்டியே நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தில் 37.2 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 36.9 டிகிரி செல்சியஸ், மதுரையில் 36.5 டிகிரி செல்சியஸ் மற்றும் தஞ்சாவூரில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: தொகுதி மறுசீரமைப்பு – தமிழக எம்பிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசிக்கவுள்ளதாக அறிவிப்பு
சென்னையில் நுங்கம்பாக்கத்தில் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 35.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.