தேசிய கைத்தறி தினம்.. கைத்தறி ஆடைகள் அணிந்து வீடியோவை பகிர பிரதமர் மோடி வலியுறுத்தல்..
மத்திய ஜவுளித் துறை அமைச்சகம், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் 12வது தேசிய கைத்தறி தின விழாவை இன்று நடத்துகிறது. பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் நிலவி வரும் கைத்தறி பாரம்பரியத்தை பாதுகாத்து, ஊக்குவித்து, மேலும் வலுப்படுத்தும் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.
ஆகஸ்ட் 7, 2026: ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படும் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, நாட்டின் வளமான மற்றும் பல்வகைமையான கைத்தறி பாரம்பரியத்தை உலகறியச் செய்வதற்காக சமூக வலைதளங்களில் கைத்தறி ஆடைகள் மற்றும் தயாரிப்புகளை அதிகளவில் பகிர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் அழைப்பு விடுத்துள்ளார்.
கைத்தறியை பயன்படுத்த பிரதமர் மோடி வலியுறுத்தல்:
Tomorrow, 7th August is National Handloom Day. Let’s make India’s handloom diversity popular.
Share your videos with your favourite handloom products, including GRWM videos on social media.
Don’t forget to use #NationalHandloomDay. pic.twitter.com/zoFdTXphRL
— Narendra Modi (@narendramodi) August 6, 2026
இதுதொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தங்களுக்கு மிகவும் பிடித்தமான கைத்தறி ஆடைகள் மற்றும் பொருட்களுடன் எடுத்துக் கொண்ட காணொளிகள், குறிப்பாக “கெட் ரெடி வித் மீ (GRWM)” வகை வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிருமாறு கேட்டுக்கொண்டார்.
அவரது பதிவில், “ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கைத்தறி பன்முகத்தன்மையை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவோம். உங்களுக்குப் பிடித்த கைத்தறி ஆடைகள் மற்றும் பொருட்களுடன் எடுத்துள்ள வீடியோக்களை #NationalHandloomDay என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் பகிருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
12வது தேசிய கைத்தறி தின விழா:
இந்த நிலையில், மத்திய ஜவுளித் துறை அமைச்சகம், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் 12வது தேசிய கைத்தறி தின விழாவை இன்று நடத்துகிறது. பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் நிலவி வரும் கைத்தறி பாரம்பரியத்தை பாதுகாத்து, ஊக்குவித்து, மேலும் வலுப்படுத்தும் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, சந்த் கபீர் கைத்தறி விருதுகள் மற்றும் தேசிய கைத்தறி விருதுகள் 2025 ஆகியவற்றை வழங்குகிறார். மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா, ஜவுளித் துறை செயலாளர் நீலம் ஷாமி ராவ், கைத்தறி மேம்பாட்டு ஆணையர் டாக்டர் எம். பீனா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், வடிவமைப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள், நெசவாளர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விருது பெறுவோரும் இதில் பங்கேற்கின்றனர்.
கைத்தறி விருதுகள்:
விழாவின் முக்கிய நிகழ்வாக, 3 சந்த் கபீர் கைத்தறி விருதுகள் மற்றும் 19 தேசிய கைத்தறி விருதுகள் என மொத்தம் 22 தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. நெசவுத் திறன், புதுமை, வடிவமைப்பு, சந்தைப்படுத்தல், தொழில்முனைவு மற்றும் கைத்தறி உற்பத்தியாளர் நிறுவனங்களின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
மேலும், இந்தியாவின் பல்வேறு கைத்தறி மரபுகளை பிரதிபலிக்கும் நான்கு நினைவு அஞ்சல் தலைகளும் வெளியிடப்படுகின்றன. “Earth. Root. Thread – Aal Dyed Handloom Textiles of Central India” மற்றும் “Handloom Awards Book 2025” ஆகிய இரண்டு நூல்களும் விழாவில் வெளியிடப்படுகின்றன.
இதனுடன், விருது பெற்ற கைத்தறி தயாரிப்புகளின் கண்காட்சியும், பாரம்பரிய கனி நெசவு மற்றும் வால் ஹேங்கிங் நெசவு ஆகியவற்றின் நேரடி செயல்விளக்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெறும் தேசிய விழாவைத் தவிர, நாடு முழுவதும் கண்காட்சிகள், வடிவமைப்பாளர் மாநாடுகள், இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இந்தியாவின் கைத்தறி துறை:
இந்தியாவின் கைத்தறித் துறை, 35 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நிலையான கிராமப்புற வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. இதில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், இந்தியாவின் பாரம்பரிய ஜவுளி மரபை பாதுகாப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகளை ஊக்குவிப்பதிலும் கைத்தறித் துறை முக்கிய பங்காற்றி வருகிறது.
1905ஆம் ஆண்டு சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு முதல் இந்த நாள் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய கைத்தறி நெசவாளர்களின் கலைத்திறன், அர்ப்பணிப்பு மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் நாளாக இது விளங்கி வருகிறது.