பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை.. தொடர்ந்து 2வது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சி!
Tamil Nadu Achieves Milestone in Economic Growth: அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தி, முதலீடுகள், புதிய தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இலக்கை நோக்கித் தமிழ்நாடு முன்னேறும் என்றும், "தமிழ்நாடு வளர்கிறது, தமிழ்நாடு வழிகாட்டுகிறது" என்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
தமிழகம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை (Double-digit economic growth) எட்டி சாதனை படைத்துள்ளது. இது குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதத்துடன் தகவல்களை வெளியிட்டுள்ளார். மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் வெற்று முழக்கம் அல்ல, அது திட்டமிடப்பட்ட முன்னேற்றம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், திராவிட மாடல் வளர்ச்சியின் பயனாக இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 5 ஆண்டுகளுக்குள் ரூ.5 லட்சம் பிஎஃப் பணத்தை எடுத்தவருக்கு ரூ.1.5 லட்சம் வரி.. விதிகள் கூறுவது என்ன?
உலக அளவில் அரிய வளர்ச்சி:
Double-digit growth📈
Two years in a row🌟Not noise. Not propaganda.
Just plain factual Numbers.Tamil Nadu clocks 10.83% growth in 2025–26 following the 11.19% recorded in the previous year leaving the national average of 7.4% far far behind🔥
While some are busy dividing… https://t.co/nlybRDrZS2 pic.twitter.com/KPmR1ZM3T0
— Dr. T R B Rajaa (@TRBRajaa) April 28, 2026
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஏற்கனவே தொழில் துறையில் உயர்ந்திருக்கும் ஒரு மாநிலம், இவ்வளவு வேகத்தில் மீண்டும் வளர்வது என்பது உலக அளவிலேயே அரிதான ஒரு விஷயம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அளவில் தமிழகத்தின் இந்த வளர்ச்சி விகிதம் மிக முக்கியமானது எனக் கருதப்படுகிறது. இது “திராவிட நாயகன்” முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அரவணைப்பிலும், கடின உழைப்பினாலும் கிடைத்த வெற்றி என்று அவர் புகழ்ந்துள்ளார்.
சீனா, தென்கொரியாவுடன் ஒப்பீடு:
இந்த வளர்ச்சி குறித்து மேலும் பேசிய அமைச்சர், “இது சாதாரணமாக கிடைத்த வளர்ச்சி அல்ல; உழைப்பு, உழைப்பு, உழைப்பு – மிகக் கடின உழைப்பினால் கிடைத்த வெற்றி. இதே போன்ற வலுவான வளர்ச்சி இன்னும் 15 முதல் 20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், சீனா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு இணையான பொருளாதார வளர்ச்சியைத் தமிழ்நாட்டிலும் நிச்சயம் சாத்தியப்படுத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் யுபிஐ மோசடிகள் – இதையெல்லாம் பண்ணாதீங்க – எச்சரிக்கும் நிபுணர்கள்
2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் இலக்கு:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டை 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை உறுதியாகக் கையில் எடுத்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தி, முதலீடுகள், புதிய தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இலக்கை நோக்கித் தமிழ்நாடு முன்னேறும் என்றும், “தமிழ்நாடு வளர்கிறது, தமிழ்நாடு வழிகாட்டுகிறது” என்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே வெளியாகியுள்ள இந்த முக்கியப் பொருளாதாரச் செய்தி, அரசியல் மற்றும் தொழில் துறையினரிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.