AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் அடுத்தடுத்து நடந்த விபரீதம்.. மாணவர்களிடையே பதற்றம்.. காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு!

Sriperumbudur Engineering College tragedy: ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் 5-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், அடுத்த நாளே மற்றொரு மாணவரும் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் சம்பவங்களை அடுத்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் அடுத்தடுத்து நடந்த விபரீதம்.. மாணவர்களிடையே பதற்றம்.. காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு!
தனியார் பொறியியல் கல்லூரி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 04 Sep 2026 09:29 AM IST

காஞ்சிபுரம், செப்.04: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் இயங்கி வரும் பிரபல ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு அதிர்ச்சி சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. கல்லூரியின் 5-வது மாடியில் இருந்து குதித்து மாணவி ஒருவர் உயிரிழந்த சோகம் தணிவதற்குள்ளேயே, அடுத்த நாளே மற்றொரு மாணவரும் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. பாதுகாப்பு சூழல் மற்றும் மாணவர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை அறிவித்துள்ளதுடன், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் வெட்டிக்கொலை.. சகோதரர் காவல் நிலையத்தில் சரண்.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி!

அடுத்தடுத்த சோக சம்பவங்கள்:

பூந்தமல்லியைச் சேர்ந்த அருள் டேவிட் என்பவரின் 19 வயது மகளான ஷெரின், ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் (AI & ML) பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் புதன்கிழமை மாலை கல்லூரி கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், வியாழக்கிழமை அன்று அதே கல்லூரியில் டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்த சசிதரன் என்ற மாணவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயமடைந்த அம்மாணவரை உடனடியாக மீட்டு தீவிர சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விசாரணை பின்னணி மற்றும் காரணங்கள்:

உயிரிழந்த மாணவி ஷெரின் மன உளைச்சலில் இருந்ததாகவும், அவரது அறையில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அதிகாரிகளும் கல்லூரியில் நேரில் விசாரணை நடத்தினர். அதே வேளையில், மாணவி ஷெரின் தற்கொலைக்கும், அடுத்த நாளே மாணவர் சசிதரன் தற்கொலைக்கு முயன்றதற்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா அல்லது தனிப்பட்ட காரணங்களால் இச்சம்பவங்கள் நடந்தனவா என்பது குறித்தும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகக் கனவு.. புனித ஜார்ஜ் கோட்டை முதல் ஓமந்தூரார் வரை.. தோன்றி மறைந்த வரலாற்றுப் பின்னணி!!

கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை:

ஒரே கல்லூரியில் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் நடந்த இந்த விபரீத சம்பவங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி வளாகத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கட்டுப்படுத்தவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மறு உத்தரவு வரும் வரை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050).

Follow Us