AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கத்திப்பாரா சந்திப்பில் ஒரே நேரத்தில் 6 மெட்ரோ ரயில்கள் – எப்போது சேவை துவங்கும்?

Kathipara Metro Rail Expansion : சென்னையின் மிக முக்கிய போக்குவரத்து சந்திப்பான கத்திப்பாராவில், வருகிற 2027 ஆம் ஆண்டு மார்ச் முதல், 3 வழித்தடங்களில் ஒரே நேரத்தில் 6 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கத்திப்பாரா சந்திப்பில் ஒரே நேரத்தில் 6 மெட்ரோ ரயில்கள்  – எப்போது சேவை துவங்கும்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Nov 2026 20:04 PM IST

சென்னை, நவம்பர் 27 : சென்னையின் மிக முக்கிய போக்குவரத்து சந்திப்பான கத்திப்பாராவில், வருகிற 2027 ஆம் ஆண்டு மார்ச் முதல், 3 வழித்தடங்களில் ஒரே நேரத்தில் 6 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியாக கடந்த 11 ஆண்டுகளுக்கு முன், சென்னையின் முதல் மெட்ரோ ரயில் சேவை (Chennai Metro) கோயம்பேடு – ஆலந்தூர் இடையே தொடங்கப்பட்டது. அப்போது, கத்திப்பாரா மேம்பாலத்துக்கு மேலே மெட்ரோ ரயில் சென்ற காட்சி பயணிகளைப் பெரிதும் கவர்ந்தது. தற்போது, அதே சந்திப்பில் மெட்ரோ சேவை மேலும் விரிவடையவுள்ளது.

மூன்று வழித்தடங்களில் 6 மெட்ரோ ரயில்கள்

முதல் கட்ட மெட்ரோ திட்டத்தின் இரண்டு வழித்தடங்கள், இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு வழித்தடம் என, மொத்தம் மூன்று வழித்தடங்கள் கத்திப்பாராவில் சந்திக்கின்றன. ஒவ்வொரு வழித்தடத்திலும் இரு திசைகளிலும் ரயில்கள் செல்வதால், ஒரே நேரத்தில் 6 ரயில்கள் கத்திப்பாரா சந்திப்பு வழியாக செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தவெக கல்வி விருது விழா – மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பித்த முதல்வர் விஜய்

இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், மாதவரத்திலிருந்து ஆலந்தூர் வழியாகச் சோழிங்கநல்லூர் செல்லும் 5வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக, கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 14.5 கி.மீ. தொலைவுக்குப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாதையில், கத்திப்பாரா சந்திப்பில், 108 அடி உயரத் தூண்கள் மீது, 125 மீட்டர் ஆரம் கொண்ட வளைவு வழியாக ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இந்த வழித்தடத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, பேலன்ஸ்டு கேன்டிலீவர் எனப்படும் சமநிலைத் தாங்கிப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பால் வெல்ஸ் சாலையிலிருந்து ஆலந்தூர் வரை, 413 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் தூண்கள், 88 அடி முதல் 108 அடி வரை உயரம் கொண்டவை. தற்போது இந்தப் பாலத்தில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் 45 நாட்களில் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து வருகிற 2027 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் சோதனை ஓட்டம் தொடங்கி, மார்ச் முதல் இந்த வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நந்தம்பாக்கம் – ஆலந்தூர் இடையேயான பணிகளை 2027 மார்ச் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மெட்ரோ நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : “திருச்சியில் ஒரே வீட்டை பலருக்கு விற்பதாக நூதன மோசடி”.. தம்பதி மீது குவிந்த புகார்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

தாமதத்துக்கு காரணம் என்ன?

மின் தூண்டல் அபாயத்தைத் தவிர்க்க, தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, முதல் கட்ட மெட்ரோவின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த நான்கு மணி நேரத்தில் மட்டுமே பாலக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள், இந்த 2027 ஆம் ஆண்டு பிப்ரவரியிலேயே நிறைவடைந்திருக்க வேண்டும். முதல் கட்ட மெட்ரோ ரயில் பாதைக்கு மிக அருகிலேயே பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், பணிகள் மேற்கொள்ள குறைவான நேரமே அனுமதிக்கப்பட்டதால் தாமதமாவதாக கூறப்படுகிறது.

Follow Us