சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : இருவரும் குற்றவாளிகள் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய கோவை சூலூர் அருகே கண்ணம்பாளையம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் எனக் கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளது.
கோயம்புத்தூர், நவம்பர் 27 : தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய கோவை சூலூர் அருகே கண்ணம்பாளையம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் எனக் கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளது. மேலும், குற்றவாளிகள் இருவருக்கான தண்டனை விவரங்கள் வரும் டிசம்பர் 4, 2026 அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இருவரும் குற்றவாளிகள் எனப் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி, கடந்த மே 21, 2026 அன்று வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்த போது கடத்தப்பட்டு, தென்னந்தோப்பில் பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கார்த்திக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, 21 நாட்களில் 819 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற வளாகத்தில் கதறிய மோகன்
இந்நிலையில், தீர்ப்பிற்காகப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நவம்பர் 27, 2026 இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட மோகன், செய்தியாளர்களைப் பார்த்து ஆவேசமாக பேசினார். அப்போது பேசிய அவர், கார்த்தியைப் பிடித்துக் கொடுத்ததே நான் தான். அவனது நண்பன் என்று என்னைக் கூறாதீர்கள். நண்பன் என்று கூறுவது தவறு. கார்த்தி என் வீட்டுப் பெண்களுடன் தொடர்பில் இருந்தான். எனக்கு நீதி வேண்டும் என்று நான் போராடி வருகிறேன். செய்தியாளர்கள் நீங்களும் நீதிக்காகப் போராடுங்கள்.என் மீது எந்தக் குற்றமும் இல்லை; இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை நீதிபதியிடமும் நான் தெரிவிக்கிறேன்” எனக் கதறினார்.
டிசம்பர் 4 ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிப்பு
அனைத்துத் தரப்பு வாதங்களும் மற்றும் ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், கோவை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் நவம்பர் 27, 2026 இன்று தீர்ப்பை வாசித்தார். அதில், சூலூர் 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இரண்டு பேரும் குற்றவாளிகள் என நீதிபதி உறுதி செய்து அறிவித்தார்.
குற்றவாளிகள் இருவருக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பதற்கு முன்னதாக, அவர்களின் பின்னணி குறித்து விரிவான அறிக்கைகளைத் தாக்கல் செய்ய நீதிபதி ஹரிஹரன் உத்தரவிட்டு உள்ளார். குற்றவாளிகளின் பின்னணி குறித்து சிறைத்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் வரும் டிசம்பர் 4-ஆம் தேதிக்கு முன்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
குற்றவாளிகளின் குடும்பப் பின்னணி மற்றும் நன்னடத்தை பழக்கவழக்கங்கள் குறித்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் இருவர் மீதும் பதிவு செய்யப்பட்டு உள்ள சட்டப் பிரிவுகளின்படி, வரும் டிசம்பர் 4-ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார். கோவை நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த நிலையில், இத்தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.