“திருச்சியில் ஒரே வீட்டை பலருக்கு விற்பதாக நூதன மோசடி”.. தம்பதி மீது குவிந்த புகார்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
Trichy Couple Accused of Real Estate Fraud: திருச்சி ராணி மெய்யம்மை நகரைச் சேர்ந்த உமேஷ் மற்றும் கஸ்தூரி தம்பதி, ஒரே வீட்டைப் பலருக்கு விற்பதாகக் கூறி ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை முன்பணம் பெற்று ஏமாற்றியதாகப் புகார் எழுந்துள்ளது. வீடு வங்கி கடனுக்காகச் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
திருச்சி, நவ.27: ஒரே வீட்டைப் பலருக்கு விற்பதாகக் கூறி முன்பணம் பெற்று ஏமாற்றியதாகத் தம்பதி மீது திருச்சி காவல் துறையினரிடம் புகார்கள் குவிந்து வருகின்றன. திருச்சி மாநகரம் கே.கே. நகர் அருகே உள்ள ராணி மெய்யம்மை நகரில் வசிப்பவர்கள் உமேஷ் மற்றும் அவரது மனைவி கஸ்தூரி ஆகியோர் ஆவர். இதில் உமேஷ் திருச்சி திருவெரும்பூர் அருகே உள்ள படைக்கலத் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. உமேஷ் மற்றும் அவரது மனைவி கஸ்தூரி இருவரும் சேர்ந்து தங்களது வீட்டை விற்பதாகக் கூறி, ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரை அணுகியுள்ளனர். அதில் வீட்டை வாங்கச் சம்மதித்தவர்களிடமிருந்து தலா ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை முன்பணமாக உமேஷ் மற்றும் கஸ்தூரி ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு – தர்காவின் பாதுகாப்புக்கு சிஆர்பிஎஃப் படைக்கு உத்தரவு
பெயர் மாற்றம் செய்யாமல் காலம் தாழ்த்திய விவகாரம்:
முன்பணம் கொடுத்தவர்கள் அந்த வீட்டை ஒரு மாதத்திற்கு மேலாகியும் தங்கள் பெயருக்கு மாற்றித் தராமல் இருந்ததால், இது குறித்து உமேஷைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். ஆனால் அவர் எந்தப் பதிலும் கூறாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பணம் கொடுத்தவர்கள் உமேஷ் வீட்டின் அருகில் வசிப்பவர்களிடம் விசாரித்த போதுதான், உமேஷ் மற்றும் கஸ்தூரி தம்பதியினர் பலரிடம் ஒரே வீட்டைக் காட்டி ஏமாற்றி முன்பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு வீட்டை விற்பனை செய்யாமல் ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. சுமார் ஏழு முதல் எட்டுப் பேரிடம் இவ்வாறு பேசி அக்ரிமெண்ட் போட்டு முன்பணம் பெற்றதாகவும், பணத்தைத் திருப்பித் கேட்ட போது தகாத முறையில் நடந்து கொண்டதாகப் புகார் அளிப்பேன் எனக் கஸ்தூரி விரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கி கடனுக்காகச் சீல் வைக்கப்பட்ட தகவல்:
குழந்தைகளின் கல்விக்காக அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும், உடனடியாக வீட்டை விற்க வேண்டும் என்றும் கூறியதால் நம்பி முன்பணம் கொடுத்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். ஆனால் தற்போது வீட்டிற்குச் சென்று பார்த்தால், அவர்கள் வங்கியில் வாங்கிய கடனுக்காக அந்த வீட்டை வங்கி நிர்வாகம் சீல் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்ட போது, பணம் கொடுத்து மிரட்டுவதாகத் தம்பதியினர் பொய்யாகப் புகார் அளித்ததாகவும், வங்கிக் கணக்கு மூலம் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : திருப்பரங்குன்றம் வழக்கு.. “உத்தரவை செயல்படுத்தினீர்களா?.. ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்!”.. உச்சநீதிமன்றம் கேள்வி!
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்:
இது தொடர்பாகத் திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளித்த போதிலும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். உமேஷ் மற்றும் கஸ்தூரி ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்கத் தொடர்பு கொள்ள முயன்ற போது தம்பதியினரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், காவல்துறையின் விசாரணையிலேயே முழு விவரங்களும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.