திருப்பரங்குன்றம் வழக்கு.. “உத்தரவை செயல்படுத்தினீர்களா?.. ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்!”.. உச்சநீதிமன்றம் கேள்வி!
Supreme Court Hears Thiruparankundram Contempt Case: திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் உத்தரவை அமல்படுத்தவில்லை எனத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது போன்ற நடவடிக்கைகள் அரசமைப்பு ரீதியான குழப்பத்தை ஏற்படுத்தி விடும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இன்றே முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட உள்ளன.
நவம்பர், 27: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது மத்திய தொல்லியல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பு இடையே மாறி மாறி காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மலையில் உள்ள தூணைப் பார்வையிடக் காவல்துறை அனுமதிக்கவில்லை என மத்திய தொல்லியல் துறை குற்றம் சாட்டிய நிலையில், ஆலோசிக்கவில்லை, ஆய்வு செய்ய அனுமதிக்கவில்லை என்பதெல்லாம் பொய் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், தொல்லியல் துறையினர் மலை உச்சிக்கு வந்ததற்கான புகைப்படம் உள்ளதாகவும், எஸ்பி என்று கூறும் மத்திய தொல்லியல் துறையினர் அவர் யார் என்று கூறாமல் மொட்டைக் கடிதாசி போலக் குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் ஆட்சியர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்தச் சூழலில், இது போன்ற நடவடிக்கைகள் அரசமைப்பு ரீதியான குழப்பத்தை ஏற்படுத்தி விடும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் முக்கியக் கருத்தைத் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: அமெரிக்கா- நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட 3 சுவாமி சிலைகள்.. தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்த தொல்லியல் துறை!
நீதிபதிகளின் கேள்விகளும் இன்றைய உத்தரவும்:
விசாரணையின்போது தலைமைச் செயலர், டிஜிபி, ஐஜி ஆகியோர்களின் பெயர்கள் கேட்கப்பட்டதாகவும், உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் உள்ளிட்ட அமர்வு எங்கள் உத்தரவைச் செயல்படுத்தினீர்களா? என்று ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் என மாவட்ட ஆட்சியர் தரப்பிடம் கேள்வி எழுப்பியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து ஆம் செயல்படுத்தினோம் எனப் பதிலளிக்கப்பட்ட நிலையில், உத்தரவைச் செயல்படுத்தி இருந்தால் எதற்காக இந்த அவமதிப்பு வழக்கு வரப்போகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இன்றைய தினமே நாங்கள் சில முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பிக்கப் போகிறோம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மத்திய தொல்லியல் துறையின் கோரிக்கை:
நாளை தீபம் ஏற்றுவதற்கு இன்றைய தினமே உத்தரவிட வேண்டும் என மத்திய தொல்லியல் துறை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், இந்த வழக்கில் சபரிமலை கோயில் விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய மாவட்ட ஆட்சியர் தரப்பு, சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவு நிறைவேற்றப்பட்டதா எனக் கேள்வி எழுப்பியது. கோயில் விஷயத்தில் அனைத்தையும் நிர்வாக ரீதியாக நிறைவேற்றிவிட முடியாது என்றும், கோயிலின் மரபு மற்றும் ஆகம விதிகளைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது என்றும் ஆட்சியர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையும் படிக்க: அரசியல் அழுத்தம் காரணமா? அன்பில் மகேஷ் வழக்கு விசாரணையிருந்து நீதிபதி திடீர் விலகல்.. என்ன காரணம்!
உத்தரவு நகல் முன் தொடங்கிய பணி:
உத்தரவு நகல் கிடைக்கும் முன்பே நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும் பணியைத் தொடங்கியதாக மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பு வாதங்களுக்கு இடையே, இன்று பிறப்பிக்கப்பட உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ள முக்கிய உத்தரவுகள் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.