அரசியல் அழுத்தம் காரணமா? அன்பில் மகேஷ் வழக்கு விசாரணையிருந்து நீதிபதி திடீர் விலகல்.. என்ன காரணம்!
High Court Judge Arulmurugan : தனியார் பள்ளிகளிடம் ரூ. 400 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் அன்பில் மகேஷுக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. அருள் முருகன் விலகுவதாக தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தருவதாக கூறி ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கூடிய வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அதிபதி அருள் முருகன் திடீரென அறிவித்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தகுதி சான்றிதழ் உள்ளிட்டவற்றை அரசிடமிருந்து பெற்றுத் தருவதாக கூறி பி.டி. அரசகுமார், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முத்துக்குமார், அவரது ஓட்டுநர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரித்து வரும் நிலையில், இதனை சிபிஐக்கு மாற்ற கோரி திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணையில் இருந்து திடீரென விலகிய நீதிபதி
இதில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில்தான், இந்த வழக்கானது நீதிபதி தர்மாதிகாரி, அருள் முருகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திடீரென இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி அருள் முருகன் தெரிவித்தார். இதனால், இந்த வழக்கு விசாரணை மற்றொரு அமர்வில் பட்டியலிடப்படும் என்ன தெரிகிறது. முன்னதாக இந்த மனுவில் மனுதாரர் வெங்கடாஜலபதி கூறியிருப்பதாவது: கட்சி நிதி என்ற பெயரில் தனியார் பள்ளிகளின் உரிமையாளர்களிடம் இருந்து பணம் வாங்கி இருப்பது முக்கிய குற்றச்சாட்டாகும்.
லஞ்ச புகார் குறித்து தீவிர விசாரணை தேவை
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், தனியார் பள்ளிகளிடம் இருந்து வாங்கிய பணம் எங்கு சென்றது. வங்கி பரிவர்த்தனைகள், முதலீடுகள், சொத்துக்கள் ஆகியவை மூலம் யார் யார் பயனடைந்து உள்ளனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் இந்த வழக்கில் தமிழக அரசின் விசாரணை நியாயமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பேரவையில் நிதியமைச்சர் கூறிய வார்த்தை
தவெக அரசு பதவி ஏற்ற 7 வாரங்களில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நபர்கள் இந்த விவகாரத்தில் அரசியல் தாக்கம் இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். அத்துடன், இந்த வழக்கு விசாரண சிபிஐக்கு மாற்ற வேண்டும். தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் வாங்கியதற்கு தானே சாட்சி என்று சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். எனவே, அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: அம்பாசமுத்திரம்- பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல் தடை நீக்கம்.. 3 தொகுதிகளுக்கு தொடர்கிறது தடை!