கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது.. சிறப்பு விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையில் நடவடிக்கை!
Kallakurichi MLA Arul Vignesh Arrested: கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய புகார் தொடர்பான வழக்கில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷைக் சிறப்பு விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி, நவ.27: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுப் புலன் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக, சிறப்புக் குழு விசாரணை அதிகாரியான சிருஷ்டி சிங் தலைமையிலான குழுவினர் தற்போது அருள் விக்னேஷை கைது செய்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்திலும் நிர்வாக வட்டாரத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு – தர்காவின் பாதுகாப்புக்கு சிஆர்பிஎஃப் படைக்கு உத்தரவு
அரசு மருத்துவமனையில் பரிசோதனை:
கைது செய்யப்பட்ட அருள் விக்னேஷை முதலில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவருக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும் என்றும், மருத்துவர்களின் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவரைக் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
நீதிமன்ற காவல், போலீஸ் கஸ்டடி வாய்ப்பு:
நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, வழக்கின் நடைமுறைகளின் அடிப்படையில் குறைந்தபட்சம் 15 நாட்கள் வரை அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், வழக்கின் விவரங்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை போலீஸ் கஸ்டடியில் எடுக்கக் கோரி விசாரணை அதிகாரி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் வாய்ப்புள்ளது. நீதிபதி அதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கும் நடைமுறை பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : திருப்பரங்குன்றம் வழக்கு.. “உத்தரவை செயல்படுத்தினீர்களா?.. ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்!”.. உச்சநீதிமன்றம் கேள்வி!
விசாரணை அதிகாரியின் முன்னெடுப்புகள்:
சிறப்பு விசாரணைக் குழு அதிகாரியான சிருஷ்டி சிங் தலைமையில் நடைபெற்று வரும் இந்த நடவடிக்கையில், கைது செய்யப்பட்ட அருள் விக்னேஷிடம் விசாரணை நடத்தவும், சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றவும் காவல்துறையினர் தயாராகி வருகின்றனர். குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகும் விசாரணைக் கஸ்டடி கோரிக்கை உள்ளிட்ட அடுத்தகட்ட நகர்வுகள் கவனம் பெற்றுள்ளன.