“அனைத்து மாநிலங்களுக்கும் 50% அதிகரிப்பு!”.. தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை முடிவு!!
Union Cabinet Approves Delimitation Bill: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், திங்கட்கிழமை தொகுதி மறுவரையறை மசோதாவைத் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் 50 சதவீதத் தொகுதிகள் அதிகரிப்பு மற்றும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாற்றமில்லை என்ற அம்சங்களுடன் இந்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது.
டெல்லி, நவ.27: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை மசோதா தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, திங்கட்கிழமை தொகுதி மறுவரையறை மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போது, மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்றப்படவில்லை. தற்போது மக்களவை அமர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மசோதாவை நிறைவேற்றும் நோக்கில் அதில் முக்கிய மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது.
இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு – தர்காவின் பாதுகாப்புக்கு சிஆர்பிஎஃப் படைக்கு உத்தரவு
50 சதவீத தொகுதி அதிகரிப்பு, பிரதிநிதித்துவம்:
இந்த மசோதாவில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றத்தின்படி, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் 50 சதவீதம் தொகுதிகள் அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தற்போது 39 தொகுதிகளைக் கொண்டுள்ள தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறைக்குப் பிறகு 59 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுவரையறை நடத்தப்படாமல் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் போன்ற மாநிலங்களின் தொகுதிகள் அதிகமாக உயர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் குறையும் என்ற நிலை இருந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்கு மாற்றம் கிடையாது என்ற உத்தரவாதம்
தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்ற கருத்தை திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவும் வலியுறுத்தி வந்தனர். இதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அனைத்து மாநிலங்களுக்கும் தொகுதிகள் 50 சதவீதம் மட்டுமே அதிகரிக்கும் என்ற அம்சம் மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை இருக்காது என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு வடமாநிலங்களில் மக்கள் தொகை அதிக அளவு உயர்ந்து தென்மாநிலங்களில் அந்த அளவுக்கு உயரவில்லை என்றாலும், 25 ஆண்டுகளுக்கு எந்தவிதமான மாற்றங்களும் இருக்காது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : திருப்பரங்குன்றம் வழக்கு.. “உத்தரவை செயல்படுத்தினீர்களா?.. ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்!”.. உச்சநீதிமன்றம் கேள்வி!
திங்கட்கிழமை தாக்கல், ஆதரவு குறித்த எதிர்பார்ப்பு:
இந்த உறுதிமொழிகளின் அடிப்படையில், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. செய்யப்பட்ட மாற்றங்களுடன் இந்த மசோதா திங்கட்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அப்போது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் எனவும், அதன் பின்னர் மாநிலங்களவையிலும் ஒப்புதல் பெறத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.