ஆண்டுக்கு 55 நாட்கள் மட்டும் பள்ளி செயல்படுமா? நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் சொல்லும் உண்மை என்ன?
நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் தேர்ந்தெடுக்கிறோம். அவர்கள் அந்த ஐந்து ஆண்டுகளும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்று பொதுவாக நினைக்கிறோம். ஆனால், உண்மையில் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் கூட்டங்கள் ஆண்டின் ஒரு சிறிய பகுதியில்தான் நடக்கின்றன. முழு விவரம் பார்க்கலாம்
ஒரு பள்ளி ஆண்டுக்கு வெறும் 55 நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு பருவத்திற்கு 55 நாட்கள் அல்ல; ஒட்டுமொத்த ஆண்டிற்குமே 55 நாட்கள்தான் பள்ளி செயல்படுகிறது என்றால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைவார்கள் அல்லவா? மீதமுள்ள நாட்களில் பள்ளி ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள்? பாடங்களைத் திட்டமிடுகிறார்களா? மாணவர்களின் தேர்வுத் தாள்களைத் திருத்துகிறார்களா? அல்லது பள்ளியே செயல்படாமல் இருக்கிறதா? என்ற கேள்விகள் எழும்.
இதுபோன்ற ஒரு கேள்வியை இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளுக்கும் நாம் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமரும் மக்களவை, ஆண்டின் எத்தனை நாட்கள் உண்மையில் செயல்படுகிறது தெரியுமா?
குறைந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள்
இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகளின்படி, முதல் மக்களவை ஆண்டுக்கு சராசரியாக 135 நாட்கள் கூடியுள்ளது. இரண்டாவது மக்களவை 116 நாட்களும், மூன்றாவது மக்களவை சுமார் 117 நாட்களும் செயல்பட்டுள்ளன.
ஆனால், காலப்போக்கில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறையத் தொடங்கியது. பத்தாவது மக்களவை ஆண்டுக்கு சராசரியாக 93 நாட்கள் மட்டுமே கூடியது. 14-வது மக்களவை 66 நாட்களும், 15-வது மக்களவை 71 நாட்களும், 16-வது மக்களவை 66 நாட்களும் செயல்பட்டன. குறிப்பாக, 2019 முதல் 2024 வரை செயல்பட்ட 17-வது மக்களவை ஆண்டுக்கு சராசரியாக வெறும் 55 நாட்கள் மட்டுமே கூடியுள்ளது.
1980-களில் இருந்தே நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 100 நாட்களுக்கும் குறைவாகவே இருந்து வருகிறது. இடையிடையே சிறிய அளவில் உயர்வு ஏற்பட்டாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.
சட்டப்பேரவைகளின் நிலையும் இதுதான்
நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, மாநில சட்டப்பேரவைகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. மாநில சட்டப்பேரவைகள் குறித்த ஓர் ஆய்வின்படி, அவை ஆண்டுக்கு சராசரியாக 26 நாட்கள் மட்டுமே கூடுகின்றன. உத்தரப் பிரதேச சட்டப்பேரவை 1950-களில் ஆண்டுக்கு சராசரியாக 83 நாட்கள் செயல்பட்டுள்ளது. ஆனால், சமீபத்திய ஆய்வுக் காலத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 24 நாட்களாகக் குறைந்துள்ளது. மக்களின் பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான ஜனநாயக அமைப்புகளே ஆண்டில் குறைவான நாட்கள் செயல்படுவது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றம் எத்தனை நாட்கள் கூட வேண்டும்? அரசியலமைப்பு சொல்வது என்ன?
இந்திய அரசியலமைப்பின்படி, நாடாளுமன்றத்தின் இரண்டு கூட்டத்தொடர்களுக்கு இடையே ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது. ஆனால், ஓர் ஆண்டில் நாடாளுமன்றம் குறைந்தபட்சம் எத்தனை நாட்கள் கூட வேண்டும் என்று அரசியலமைப்பு எந்தக் கட்டாய விதியையும் குறிப்பிடவில்லை.
2002-ம் ஆண்டு அரசியலமைப்பை மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு, பெரிய சட்டமன்றங்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 90 நாட்களும், சிறிய சட்டமன்றங்கள் குறைந்தபட்சம் 50 நாட்களும் கூட வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், இந்தப் பரிந்துரைகள் சட்டமாக்கப்படவில்லை. நாடாளுமன்றம் ஆண்டுக்கு 100 நாட்கள் கட்டாயம் கூட வேண்டும் என்ற தனிநபர் மசோதா மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும், அது சட்டமாக நிறைவேற்றப்படவில்லை.
நாடாளுமன்றம் கூடாத நாட்களில் என்ன நடக்கிறது?
நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள் நடைபெறாத நாட்களில் எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை என்று நினைத்துவிடக் கூடாது. நாடாளுமன்றக் குழுக்கள் கூட்டத்தொடர்களுக்கு இடைப்பட்ட காலங்களிலும் செயல்படுகின்றன.
மசோதாக்களை விரிவாக ஆய்வு செய்வது, நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துகளைக் கேட்பது, அறிக்கைகளைத் தயாரிப்பது போன்ற பணிகள் இந்தக் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேபோல், அமைச்சகங்கள் புதிய சட்டங்களுக்கான வரைவு தயாரிப்பிலும் ஈடுபடுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதிகளுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கான பிரதிநிதித்துவப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
எனவே, நாடாளுமன்றம் கூடும் நாட்கள் குறைவாக இருப்பதால் உறுப்பினர்கள் வேலை செய்வதில்லை என்று கூறிவிட முடியாது. நாடாளுமன்றக் குழுக்களில் நடைபெறும் விவாதங்களும் முக்கியமானவை.
கூட்டத்தொடர் நாட்கள் குறைவதால் என்ன பாதிப்பு?
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறைவாக நடைபெறுவதால் சில முக்கியமான ஜனநாயகச் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.ஒரு அமைச்சர் மக்களின் முன்னிலையில் அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய முக்கியமான இடம் நாடாளுமன்றம். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துகளையும், மக்களின் பிரச்சினைகளையும் நாடு முழுவதும் கேட்கும் வகையில் எடுத்துரைக்கும் வாய்ப்பும் அங்குதான் கிடைக்கிறது.
மேலும், ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன் சாதக, பாதகங்கள் குறித்து விரிவாக விவாதிக்க நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள் அவசியமாகின்றன. கூட்டத்தொடர் நாட்கள் குறைவாக இருக்கும்போது, இதுபோன்ற விவாதங்களுக்குக் கிடைக்கும் நேரமும் குறைகிறது. அதிலும், ஏற்கெனவே உள்ள குறைந்த நாட்களிலும் அமளி, வெளிநடப்பு போன்ற நிகழ்வுகளால் அவை பாதிக்கப்பட்டால், விவாதத்திற்கான வாய்ப்புகள் மேலும் குறைந்துவிடுகின்றன.
ஜனநாயகத்தின் செயல்பாடுகளை நாம் எவ்வளவு பார்க்கிறோம்?
நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் தேர்ந்தெடுக்கிறோம். அவர்கள் அந்த ஐந்து ஆண்டுகளும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்று பொதுவாக நினைக்கிறோம்.
ஆனால், உண்மையில் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் கூட்டங்கள் ஆண்டின் ஒரு சிறிய பகுதியில்தான் நடக்கின்றன. மற்ற நேரங்களில் உறுப்பினர்களின் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றன. குழுக் கூட்டங்கள், ஆவண ஆய்வுகள், தொலைபேசி உரையாடல்கள், தொகுதிப் பணிகள் எனப் பல செயல்பாடுகள் பொதுமக்களின் பார்வைக்கு வெளியே நடக்கின்றன.
நாடாளுமன்றம் ஆண்டுக்கு 55 நாட்கள் மட்டுமே கூடுகிறது என்ற தகவல் என்பது யாரையும் குற்றம்சாட்டுவதற்கான எண் அல்ல. அது நமது ஜனநாயகத்தின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கான ஓர் அளவுகோல். நாம் நேரடியாகப் பார்க்கக்கூடிய ஜனநாயகச் செயல்பாடுகள் எவ்வளவு குறைவாக இருக்கின்றன என்பதையும், நமது பிரதிநிதிகளின் மற்ற பணிகளை எந்த அளவுக்கு நம்ப வேண்டியிருக்கிறது என்பதையும் இந்த எண்ணிக்கை உணர்த்துகிறது.
மக்களவையில் ஆண்டுக்கு எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 55 நாட்கள் போதுமா? அல்லது 100 நாட்களுக்கும் மேல் நடைபெற வேண்டுமா?