AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரசியலமைப்பு உருவானதை நேரில் பார்த்த சாமானிய மக்கள்! இந்திய அரசியலமைப்பு சபையின் வரலாறு தெரியுமா?

Constitution Day 2026 : அரசியலமைப்பு சபையில் நடைபெற்ற விவாதங்கள் சாதாரணமானவை அல்ல. இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய பல முக்கியமான விஷயங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். நாட்டின் மொழிக் கொள்கை, நில உரிமைகள், குடியுரிமைக்கான வரையறை, நீதிமன்றங்களால் நடைமுறைப்படுத்தக்கூடிய அடிப்படை உரிமைகள், எதிர்காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய அரசின் வழிகாட்டும் கொள்கைகள் எனப் பல்வேறு விஷயங்கள்

அரசியலமைப்பு உருவானதை நேரில் பார்த்த சாமானிய மக்கள்! இந்திய அரசியலமைப்பு சபையின் வரலாறு தெரியுமா?
அரசியலமைப்பு
Santosh Nair
Santosh Nair | Published: 26 Nov 2026 11:50 AM IST

இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது, நாடாளுமன்றக் கூட்ட அரங்கில் அமர்ந்து விவாதித்த தலைவர்களைப் போலவே, அந்த விவாதங்களை அமைதியாகக் கவனித்த சாமானிய மக்களுக்கும் ஒரு முக்கியமான இடம் இருந்தது. பேசுவதற்கும், கைதட்டுவதற்கும் அனுமதி இல்லாத பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து, தங்கள் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுவதை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் பார்த்தனர். இந்திய அரசியலமைப்பு உருவான வரலாற்றில் அதிகம் பேசப்படாத இந்தப் பக்கத்தைப் பார்ப்போம்.

அரசியலமைப்பு உருவானதைப் பார்த்த 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்

1948ஆம் ஆண்டு குளிர்காலத்தில், டெல்லியில் நடைபெற்ற அரசியலமைப்பு சபைக் கூட்டத்தைப் பார்ப்பதற்காகத் தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்தனர். பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது பணிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு, இரண்டு நாட்கள் ரயிலில் பயணம் செய்து, பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து கூட்டத்தைப் பார்ப்பதாக இந்த வரலாற்றை கற்பனை செய்து பார்க்கலாம்.

அவரைப் போன்ற சாமானிய மக்களுக்குக் கூட்டத்தில் பேசவோ, கைதட்டவோ அனுமதி கிடையாது. அவர்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம், அங்கு நடைபெறும் விவாதங்களைக் கவனிப்பதுதான்.

இந்திய அரசியலமைப்பு சபை இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் நடைபெற்றது. மொத்தம் 11 அமர்வுகளில் 167 நாட்கள் விவாதங்கள் நடைபெற்றன. இந்தக் காலகட்டத்தில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையாளர் மாடத்தில் இருந்து அரசியலமைப்பு உருவாக்கப்படுவதை நேரில் பார்த்துள்ளனர். இந்தத் தகவலை மத்திய அரசின் ஆவணங்களும் உறுதிப்படுத்துகின்றன

என்னென்ன விவாதங்கள் நடைபெற்றன?

அரசியலமைப்பு சபையில் நடைபெற்ற விவாதங்கள் சாதாரணமானவை அல்ல. இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய பல முக்கியமான விஷயங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். நாட்டின் மொழிக் கொள்கை, நில உரிமைகள், குடியுரிமைக்கான வரையறை, நீதிமன்றங்களால் நடைமுறைப்படுத்தக்கூடிய அடிப்படை உரிமைகள், எதிர்காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய அரசின் வழிகாட்டும் கொள்கைகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நீண்ட விவாதங்கள் நடைபெற்றன.இந்த விவாதங்களில் சில கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சில கருத்துகள் நிராகரிக்கப்பட்டன. ஒவ்வொரு உறுப்பினரும் என்ன பேசினார்கள் என்பதற்கான பதிவுகளும் முறையாகப் பராமரிக்கப்பட்டன. இறுதியாக, 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் நினைவாகவே ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. அப்போது அதில் 395 பிரிவுகள், 22 பகுதிகள் மற்றும் 8 அட்டவணைகள் இடம்பெற்றிருந்தன.

அரசியலமைப்பில் கையெழுத்திட்ட 15 பெண்கள்

இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பெண்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இறுதி செய்யப்பட்ட அரசியலமைப்பு ஆவணத்தில் 284 உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். அரசியலமைப்பு சபையில் இடம்பெற்றிருந்தவர்களில் 15 பேர் பெண்கள். சரோஜினி நாயுடு, ராஜ்குமாரி அம்ரித் கவுர், ஹன்சா மேத்தா, சுசேதா கிருபளானி, ஜி. துர்காபாய் உள்ளிட்ட பெண்கள் இதில் முக்கியமானவர்கள்.

பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்கள் மற்ற உறுப்பினர்களைப் போலவே விவாதங்களில் பங்கேற்று தங்களது கருத்துகளை முன்வைத்தனர். இறுதியில் அரசியலமைப்பு ஆவணத்திலும் கையெழுத்திட்டனர்.

கையால் எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு அச்சிடப்பட்ட ஆவணம் அல்ல என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அரசியலமைப்பு கையால் எழுதப்பட்டது.

டெல்லியைச் சேர்ந்த எழுத்துக்கலைஞர் பிரேம் பெஹாரி நாராயண் ரைசாதா (Prem Behari Narain Raizada) இந்தப் பணியை மேற்கொண்டார். சாந்திநிகேதனைச் சேர்ந்த கலைஞர்கள், ஆச்சார்ய நந்தலால் போஸின் தலைமையில் அரசியலமைப்பின் பக்கங்களை அழகிய ஓவியங்களால் அலங்கரித்தனர். மொத்தம் 22 ஓவியங்கள் அதில் இடம்பெற்றன.சுமார் 90 ஆயிரம் வார்த்தைகளைக் கொண்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தின் ஒவ்வொரு எழுத்தும் மனிதக் கைகளால் எழுதப்பட்டது. பல கோடி மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான ஆவணம், பல மாதங்களாக ஒருவர் பேனாவால் அமர்ந்து எழுதிய உழைப்பின் விளைவாக உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பைப் பார்க்கும் நமது பார்வை மாறிவிட்டதா?

அன்றைய காலகட்டத்தில் டெல்லியில் உள்ள பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து, அரசியலமைப்பு உருவாக்கப்படுவதைச் சாமானிய மக்கள் நேரில் பார்த்தனர். அவர்கள் கூட்டத்தில் பேசவில்லை. எந்தப் பதவியும் அவர்களுக்கு இல்லை. ஆனால், உருவாக்கப்படும் அரசியலமைப்பின் கீழ் வாழப்போகும் குடிமக்கள் என்ற மிகப்பெரிய பொறுப்பு அவர்களுக்கு இருந்தது.

இன்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், நம்மில் பலர் அரசியலமைப்பைப் பற்றி செய்தித் தலைப்புகள், நீதிமன்றத் தீர்ப்புகள், பள்ளிப் பாடப்புத்தகங்கள் மற்றும் சமூக வலைதளச் செய்திகள் மூலமாகவே தெரிந்துகொள்கிறோம்.நம்முடைய உரிமைகள், கடமைகள் மற்றும் நாட்டின் நிர்வாக அமைப்பைத் தீர்மானிக்கும் அரசியலமைப்பை எத்தனை பேர் முழுமையாகப் படித்திருக்கிறோம் என்பது முக்கியமான கேள்வி. அன்றைய பார்வையாளர் மாடம் மக்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு அழைப்பாக இருந்தது. வாருங்கள், உங்கள் நாட்டின் எதிர்காலம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை நேரில் பாருங்கள் என்பதே அந்த அழைப்பு.

இன்று அந்த அழைப்பை நாம் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்கிறோம்? அரசியலமைப்பைப் புரிந்துகொள்வதற்கும், கேள்வி கேட்பதற்கும், அதன் மதிப்புகளைப் பாதுகாப்பதற்கும் நாம் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறோம்?இந்திய அரசியலமைப்பு சபையின் பார்வையாளர் மாடத்தில் நீங்கள் அமர்ந்திருந்தால், அங்கிருந்த தலைவர்களிடம் என்ன ஒரு கேள்வியைக் கேட்டிருப்பீர்கள்?

 

Follow Us