“கொலையில் முடிந்த 8 ஆண்டு கால காதல் திருமணம்”.. கணவனே மனைவிக்கு செய்த கொடூரம்.. திடுக் பின்னணி!!
Woman Hacked to Death by Husband: வேலூர் சத்துவாச்சரி பகுதியில் உள்ள திருமண தகவல் மையத்தில் புகுந்து, கீர்த்திகா என்ற பெண் கணவரால் பட்டா கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளைக் காப்பாற்ற முயன்ற தாய்க்கும் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில், கணவர் ஹரிபிரசாத் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
ராணிப்பேட்டை, நவ.26: ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா என்பவரின் தாய் விஜயா, வேலூர் சத்துவாச்சரி பகுதி ஆர்டிஓ சாலை 12-வது தெருவில் உள்ள தெலுங்கு மேட்ரிமோனி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை அன்று கீர்த்திகா தனது தாய் பணியாற்றும் மேட்ரிமோனி அலுவலகத்தில் தாயுடன் இருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் கீர்த்திகாவைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனைப் பார்த்த கீர்த்திகாவின் தாயார் மகளைக் காப்பாற்ற முயன்றபோது அவருக்கும் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இரத்த வெள்ளத்தில் சரிந்த கீர்த்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் கீர்த்திகாவின் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், காயமடைந்த அவரது தாயாரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில், பட்டா கத்தியால் வெட்டிய நபர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்; அவர் கீர்த்திகாவின் கணவரான ஹரிபிரசாத் என்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி கொலைக்கான பின்னணியை வெளிக்கொணர்ந்தனர்.
இதையும் படிக்க: ரூ. 400 கோடி மோசடி வழக்கு.. அன்பில் மகேஷ் உள்ளிட்ட மூவரிடம் 2வது நாளாக தீவிர விசாரணை!
காதல் திருமணமும், குடும்பத் தகராறும்:
சத்துவாச்சரி சவுத் அவென்யூ தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநரான ஹரிபிரசாத், அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கீர்த்திகாவை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார்; இவர்களுக்கு ஏழு மற்றும் ஐந்து வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். கார் ஓட்டுநரான ஹரிபிரசாத்தின் வீட்டிற்கு அவருடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றதால் அவருடன் கீர்த்திகாவுக்கு அறிமுகம் ஏற்பட்டதாகவும், கீர்த்திகாவும் அந்த ஆண் நண்பரும் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகச் சிலர் ஹரிபிரசாத்திடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹரிபிரசாத் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் ஹரிபிரசாத் மனைவி கீர்த்திகாவை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் நிலையில், அங்கு சென்ற கீர்த்திகாவின் பெற்றோர் ஹரிபிரசாத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி காயத்துடன் இருந்த மகளைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர்; அப்போது உங்கள் மகள் இந்த வீட்டில் இருந்தாலாவது உயிரோடு இருப்பாள் என ஹரிபிரசாத் எச்சரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண தகவல் மையம் வரையிலான நகர்வுகள்:
அதனைத் தொடர்ந்து கீர்த்திகாவின் பெற்றோர் காயமடைந்த மகளைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது ஹரிபிரசாத் தொடர்ந்து கீர்த்திகாவிற்குத் தொலைபேசியில் அழைப்பு விடுத்த போதிலும், அவர் அழைப்பை ஏற்க மறுத்துள்ளார். பின்னர் வீட்டிற்குச் சென்றால் ஹரிபிரசாத் அங்கு வந்துவிடுவான் என்பதால், கீர்த்திகாவின் பெற்றோர் அவரைத் தாயார் பணிபுரியும் திருமண தகவல் மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிக்க: செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்.. விசாரணையை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு; குற்றவாளியாகக் கருதக் கூடாது என கருத்து!
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை:
கீர்த்திகாவின் தந்தை வாகனத்தை நிறுத்துவதற்காகப் பக்கத்துத் தெருவிற்குச் சென்றிருந்த சமயத்தில், ஹரிபிரசாத் மீண்டும் கீர்த்திகாவிற்கு அழைத்துள்ளார். அப்போது கீர்த்திகா கணவனின் அழைப்பை ஏற்றுத் தான் தாயார் பணிபுரியும் இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு பட்டா கத்தியுடன் சென்ற ஹரிபிரசாத் உள்ளே நுழைந்து தனது மனைவியை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஹரிபிரசாத்தைக் கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்; தாய் கண்முன்னே காதல் திருமணம் செய்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.