பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்: ஆளுநரை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் புகார் மனு!
பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்ட தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையில் ஆளுநரைச் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் மனு அளித்தார். மேலும், துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நவம்பர் 26, 2026: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து, பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்ட தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி – விசாரணைக்குழு அமைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியதாக தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது.
இந்தக் குழுவுக்கு வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா தலைமை தாங்குகிறார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் மதுமதி, சட்டத்துறை செயலாளர் சுமதி மற்றும் சுனிதா ஜோ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு.. 18 சிறுமிகள் பாதிக்கப்பட்டது அம்பலம்.. தலைமறைவான பிரகாஷை பிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ்..
இதற்கிடையே, பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் அரசியல் ரீதியாகப் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அருள் விக்னேஷை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் தரப்பிலும் இந்த விவகாரம் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்த உதயநிதி ஸ்டாலின்
இந்தச் சூழலில், தமிழ்நாடு ஆளுநரை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து மனு அளித்துள்ளார். அப்போது, பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அருள் விக்னேஷை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ரூ.1,020 கோடி ஒப்பந்த முறைகேடு வழக்கு.. கே.என்.நேரு சகோதரரின் உதவியாளர் கைது!
மேலும், புகார் அளிக்க வந்தவரைத் தாக்கியதாகக் கூறப்படும் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இதே விவகாரம் தொடர்பாக நேற்று டிஜிபி அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் புகார் மனு அளித்திருந்தார். தொடர்ந்து இன்று ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.