விழித்தெழுந்தவுடன் தும்மல் வருதா? வீட்டிலேயே எளிய வழியில் விரட்டலாம்!
Morning Sneezing: காலையில் எழுந்தவுடன் ஏற்படும் தொடர் தும்மல் மற்றும் மூக்கு ஒழுகல் காலை 10 மணிக்கு மேல் குறையுமானால் அது அலர்ஜிக் ரைனிடிஸ் பாதிப்பாக இருக்கலாம். கொதிக்க வைத்து ஆற வைத்த உப்புநீரால் மூக்கைக் கழுவுவது, வாரம் ஒருமுறை படுக்கைத் துணிகளைச் சுத்தம் செய்வது, ஈரத் துணியால் தரையைத் துடைப்பது ஆகியவை ஒவ்வாமையைக் குறைக்க உதவும்.
விழித்தெழுந்தவுடன் தொடர்ச்சியாகத் தும்மல் வருவது, மூக்கிலிருந்து நீர் வடிவது, கண்களில் அரிப்பு ஏற்படுவது ஆகியவை காலை 10 மணிக்கு மேல் தானாகவே குறையுமானால், அதைச் சாதாரண சளியாகக் கருத வேண்டாம் என மருத்துவர் கார்த்திகேயன் சுட்டிக்காட்டியுள்ளார். இது மூக்கின் உட்புறத்தில் ஏற்படும் ஒவ்வாமையால் வரும் அலர்ஜிக் ரைனிடிஸ் பாதிப்பாக இருக்கலாம். படுக்கையில் தங்கும் நுண்ணிய தூசிப் பூச்சிகள், மகரந்தம் மற்றும் பூஞ்சைகள் இரவு முழுவதும் சுவாசப் பாதையைத் தூண்டுவதே இந்த நிலைக்கு முக்கியக் காரணமாகும். மாத்திரைகளைத் தொடர்ந்து சார்ந்திருப்பதற்குப் பதிலாக, அன்றாடப் பழக்கவழக்கங்களில் எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்தத் தொந்தரவைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Also Read: மழைக்காலத்தில் துணிகளில் ஈர வாடை வருகிறதா? அலமாரி முதல் ஆடை வரை எப்படி பாதுகாப்பது?
உப்புநீர் கொண்டு மூக்கைச் சுத்தம் செய்தல்
சலைன் கரைசல் மூலம் மூக்கின் உட்புறத்தைக் கழுவுவது, சுவாசப் பாதையில் ஒட்டியிருக்கும் தூசி மற்றும் ஒவ்வாமைத் துகள்களை வெளியேற்ற உதவும். இதன் மூலம் மூக்கடைப்பு, நீர் வடிதல் மற்றும் உள்ளுக்குள் ஏற்படும் எரிச்சல் ஆகியவை குறையும். இந்தப் பழக்கத்தைப் பின்பற்றும்போது சுத்தமான, கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீர் அல்லது ஸ்டெரைல் தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நேரடிக் குழாய் நீரைத் தவிர்த்து, சரியான விகிதத்தில் உப்பு கலந்த கரைசலைப் பயன்படுத்துவது பாதுகாப்பான பலனைத் தரும்.
படுக்கைத் துணிகளைத் தவறாமல் துவைத்தல்
தலையணை உறைகள், போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகளில் நுண்ணிய தூசிப் பூச்சிகள் எளிதில் சேர்ந்துவிடுவதால், காலையில் எழுந்தவுடன் தும்மல் தீவிரமடைய வாய்ப்புள்ளது. இவற்றை வாரத்திற்கு ஒரு முறையாவது துவைத்து நன்கு உலர்த்துவது அவசியமாகும். துணிகளின் தன்மைக்கும் பராமரிப்பு விதிகளுக்கும் ஏற்ப 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் துவைப்பது தூசிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தச் சிறந்த வழியாக அமையும்.
வீட்டுக்குள் புகையைத் தவிர்த்தல்
சமையலறைப் புகை, ஊதுபத்தி, சாம்பிராணி, கொசுவர்த்தி மற்றும் சிகரெட் புகை ஆகியவை மூக்கின் மென்மையான சவ்வில் எரிச்சலை உண்டாக்கி ஒவ்வாமையை அதிகரிக்கச் செய்யும். சமைக்கும்போது எக்ஸாஸ்ட் ஃபேன் இயக்குவதும், பூஜை நேரங்களில் ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டத்தை வைத்திருப்பதும் நல்லது. குறிப்பாகப் படுக்கையறையில் கடுமையான வாசனைப் பொருட்கள் மற்றும் புகை உருவாக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஈரத் துணியால் தரையைத் துடைத்தல்
உலர்ந்த துடைப்பத்தைக் கொண்டு தரையைப் பெருக்கும்போது, பதுங்கியிருக்கும் தூசிகள் காற்றில் கலந்து மீண்டும் மூக்கிற்குள் சென்று ஒவ்வாமையைத் தூண்டும். அதற்குப் பதிலாக ஈரத் துணி அல்லது மாப் பயன்படுத்தித் தரையைத் துடைப்பது தூசி பரவாமல் தடுக்கும். படுக்கையறையைத் தினமும் தூசி படியாமல் சுத்தமாக வைத்திருப்பதோடு, தேவைப்பட்டால் ஹெபா வடிகட்டி கொண்ட காற்றுச் சுத்திகரிப்பானையும் பயன்படுத்தலாம்.
Also Read: மழைக்காலத்தில் துணிகளில் ஈர வாடை வருகிறதா? அலமாரி முதல் ஆடை வரை எப்படி பாதுகாப்பது?
வெளியே சென்று வந்ததும் உடை மாற்றுதல்
வெளியில் செல்லும்போது காற்றில் மிதக்கும் தூசி மற்றும் மகரந்தத் துகள்கள் ஆடை, முடி மற்றும் சருமத்தில் ஒட்டிக்கொள்ளும். வீடு திரும்பியதும் முகம், கைகளைக் கழுவி உடைகளை மாற்றுவது ஒவ்வாமைத் துகள்கள் படுக்கையில் பரவுவதைத் தடுக்கும். இரவு உறங்கும் முன் குளிப்பதோ அல்லது தலை மற்றும் முகத்தைச் சுத்தம் செய்வதோ நல்லது, இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் தகுந்த முகக்கவசம் அணிவதும் பயனளிக்கும்.