ரூ. 400 கோடி மோசடி வழக்கு.. அன்பில் மகேஷ் உள்ளிட்ட மூவரிடம் 2வது நாளாக தீவிர விசாரணை!
Second Day of Custody Probe Against Anbil Mahesh: தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 400 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், முத்துக்குமார் மற்றும் சரவணன் ஆகியோரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். பணப் பட்டுவாடா மற்றும் மோசடிப் பணம் சென்ற இடங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை, நவ.26: தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறிச் சுமார் 400 கோடி ரூபாய் அளவில் மோசடி மற்றும் லஞ்சம் பெறப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட 6 நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இரண்டாவது முறையாகக் காவலில் எடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவரது நண்பரான முத்துக்குமார் மற்றும் முத்துக்குமாரின் உறவினரான சரவணன் ஆகிய மூன்று நபர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று காவலில் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது நாளாக இந்த மூவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களில் வைத்து மூவரிடமும் தனித்தனியாக விரிவான விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்றும் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: துணை சபாநாயகர் ரவிசங்கர், காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிய கோரிக்கை.. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்!
முத்துக்குமார், சரவணன் குறித்த தகவல்கள்:
இந்த வழக்கில் முக்கிய நபர்களாகக் கருதப்படும் இந்த மூவரிடம் நடைபெற்று வரும் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. குறிப்பாக, மோசடியாகப் பெறப்பட்ட பணத்தை யாருக்கெல்லாம் பகிர்ந்து வழங்க வேண்டும் என்ற முடிவை முத்துக்குமார் எடுத்ததாகக் கூறப்படுகிறது. அதேபோன்று, முத்துக்குமாரின் உறவினரான சரவணன் சம்பந்தப்பட்ட அலுவலகத்தைக் கவனித்து வந்ததுடன், அந்த அலுவலகத்தில் பணம் பெறுவது, எந்தெந்தத் தனியார் பள்ளிகள் எனப் பட்டியல் தயாரிப்பது மற்றும் தனியார் பள்ளி உரிமையாளர்களுடன் கூட்டங்கள் நடத்தியது ஆகியவற்றை மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளதால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரூ.400 கோடி பணம் குறித்து விசாரணை:
சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு இந்த மோசடி நடைபெற்றதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பெருந்தொகை எங்கெல்லாம் சென்றிருக்கிறது என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக முதல் முறை காவலில் எடுக்கப்பட்டபோது பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் கிடைத்த தகவல்களைக் கொண்டு, தற்போது இந்த மூன்று நபர்களிடமும் கேள்விகள் எழுப்பப்பட்டுத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்.. விசாரணையை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு; குற்றவாளியாகக் கருதக் கூடாது என கருத்து!
நீதிமன்ற ஆஜர் மற்றும் குற்றப்பத்திரிக்கை:
இன்றைய விசாரணை நிறைவடைந்த பின்னர், இன்று மாலை அன்பில் மகேஷ், முத்துக்குமார் மற்றும் சரவணன் ஆகிய மூன்று நபர்களும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுவர் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தயார் செய்ய இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.