“பறிபோகுமா எம்எல்ஏ பதவி?”.. அருள் விக்னேஷ் கைதுக்கு பிறகு சட்ட நடைமுறைகள் சொல்வது என்ன?
TVK MLA Arul Vignesh arrest: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகருக்குத் தகவல் அனுப்புவது மற்றும் அடுத்தகட்டச் சட்ட நடைமுறைகள் குறித்து விரிவான விவரங்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட உடனேயே பதவி பறிபோகாது என்றாலும், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் தகுதி இழப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நவ.27: தவெக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்டச் சட்ட மற்றும் சட்டப்பேரவை நடைமுறைகள் என்னென்ன என்ற விவாதம் எழுந்துள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டால் உடனடியாகச் சபாநாயகருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது சட்டப்படியான நடைமுறையாகும். அதன்படி, அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டதன் அடிப்படையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ரிமான்ட் செய்த நீதிபதி அலுவலகம் மற்றும் சிறைச்சாலையின் சிறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றிலிருந்து சபாநாயகருக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல்கள் சபாநாயகரிடம் சென்றடைந்தவுடன், அருள் விக்னேஷ் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்ற விவரங்களைச் சட்டப்பேரவைச் செயலகம் மூலமாக அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கும் நடைமுறைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதையும் படிக்க: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது.. சிறப்பு விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையில் நடவடிக்கை!
கைது செய்யப்பட்ட உடனேயே பதவி பறிபோகுமா?
எம்எல்ஏ கைது செய்யப்பட்ட உடனேயே அவரது பதவி பறிபோய்விடுமா என்ற கேள்வி எழுந்தாலும், அதற்கான வாய்ப்பு தற்போது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் போது அவை வளாகத்திற்குள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலோ, அவை நடவடிக்கைகள் தொடர்பான புகார்கள் வந்தாலோ மட்டுமே சபாநாயகர் இடைக்கால சஸ்பென்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆனால், அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு அவைக்கு வெளியே நிகழ்ந்த விவகாரம் என்பதால், இது குறித்துக் காவல்துறை சுயாதீனமாக விசாரணை நடத்தி வருகிறது. எனவே, காவல்துறை தரப்பிலிருந்து சபாநாயகருக்குத் தகவலாக மட்டுமே இது தெரிவிக்கப்படும் என்றும், சபாநாயகர் இதில் நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதி நீக்க விதிகள் மற்றும் ராஜினாமா நடைமுறை:
இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவில் தீர்ப்பு வழங்கப்படும் போது, அருள் விக்னேஷ் தண்டிக்கப்பட்டு, குறிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தகுதியைச் சட்டப்படி இழப்பார் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தகுதி நீக்கம் செய்வதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், அவர் தாமாக முன்வந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய விரும்பினால், தனது கைப்பட எழுதிய கடிதத்தைச் சபாநாயகரிடம் முறையாகச் சேர்க்க வேண்டும். நேரில் வந்தோ அல்லது அவர் சார்பாக யாராவது அனுப்பி வைத்தாலோ, அந்தக் கடிதம் அவரால்தான் ராஜினாமா செய்வதற்காக எழுதப்பட்டதா என்பதைச் சபாநாயகர் முதலில் உறுதி செய்த பிறகே ராஜினாமா மீது நடவடிக்கை எடுப்பார்.
இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு – தர்காவின் பாதுகாப்புக்கு சிஆர்பிஎஃப் படைக்கு உத்தரவு
அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகள்:
தற்போதைய நிலையில் கைது மற்றும் ரிமான்ட் விவரங்கள் சபாநாயகர் மூலமாக மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்ட பிறகு, அடுத்தடுத்த நிலைகளில் கட்சியின் நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பதும் கவனிக்கப்படுகிறது. அவர் ராஜினாமா செய்கிறாரா அல்லது வழக்கு விவகாரத்தில் அடுத்தகட்டச் சட்ட நிலைப்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பதைப் பொறுத்தே சபாநாயகர் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.