எஸ்ஐஆர் பணியில் மிகப்பெரிய குளறுபடி…நாதக வேட்பாளர் இறந்ததாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
Ntk Candidate Removed From Voter List: எஸ் ஐ ஆர் திருத்த பணியில் சிவகங்கை தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மற்றும் அவரது கணவர் இறந்ததாக கூறி அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், எதிர்க் கட்சிகளின் இந்த எதிர்ப்பையும் மீறி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மூலம் சுமார் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட உள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இதில், பனிச்சுமை அதிகம் இருப்பதாக கூறி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வந்த ஊழியர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். மேலும், வாக்காளர்களின் ஆதார் எண், செல்போன் எண் ஆகியவை பொதுவெளியில் வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்-கணவர் பெயர் நீக்கம்
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் பெரிய குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. அதன்படி, சிவகங்கை தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்துஜா ரமேஷ் என்பவரும், அவரது கணவர் ரமேஷ் என்பவர்களின் பெயர்கள் இறந்தவர்கள் எனக் கூறி நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இந்துஜா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆட்சியர் பொற்கொடியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: தவெக தலைமையில் புதிய கூட்டணி…டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!
சிவகங்கை ஆட்சியரிடம் கடும் வாக்கு வாதம்
அப்போது, உயிருடன் இருக்கும் என்னையும், எனது கணவரையும் இறந்ததாக கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து எங்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய தவறு எப்படி நிகழ்ந்தது என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தரப்பில் கூறுகையில், வாக்காளர் திருத்தப் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை குறிப்பிடுவதற்காகவே இந்த பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இந்த தவறை சரி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
மேலும், இந்த தவறை செய்த ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், நீங்கள் வாக்குவாதம் செய்வது தவறு என்று தெரிவித்ததை அடுத்து, இந்துஜா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் காரில் புறப்பட்டு சென்றனர். இந்த வாக்குவாதத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க: https://www.tv9tamilnews.com/tamil-nadu/two-youths-sickle-on-near-tambaram-sanatorium-44299.html



