அண்ணாமலை-ஓபிஎஸ் திடீர் சந்திப்பு…அரசியல் முக்கியத்துவமாகிறது!
Annamalai panneerselvam meet: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கோவையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக உரிமை மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பை மேற்கொண்டனர். இவர்களின் இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, அந்த கட்சிகளின் தலைவர்கள் மக்கள் சந்திப்பு பயணம், பிரச்சார பொதுக்கூட்டம், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சியை மேலும் வலுப்படுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இறங்கி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தொகுதி பங்கீடு குறித்தும் சில கட்சிகள் பேச்சு வார்த்தையை நடத்தியதாகவும், நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தே.ஜ.கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்
இந்த நிலையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த நிலையில், தனக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்ற அதிருப்தியில் அந்த கூட்டணியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலகினார். இதனால், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் எனவும், தனியாக கட்சி தொடங்குவார் எனவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. மேலும், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
மேலும் படிக்க: மீன் பிடிக்க விரித்த வலையில் சிக்கிய முதலை குட்டி.. சிதம்பரத்தில் பரபரப்பு!




டெல்லியில் முகாமிட்டிருந்த ஓ.பி.எஸ்
இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓ. பன்னீர்செல்வம், மீண்டும் அந்த கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்ற நிலை நிலவி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ. பன்னீர்செல்வம் திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் பேசியிருந்தார். ஓ பன்னீர்செல்வத்தின் இந்த திடீர் டெல்லி பயணமும், அமித்ஷாவுடனான சந்திப்பும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரும் டெல்லியில் முகாமிட்டிருந்தனர்.
அண்ணாமலை – ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு
இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற அ தி மு க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நிர்வாகி இல்ல திருமண விழாவில் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்று இருந்தார். இந்த திருமண விழாவிற்கு வந்திருந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகி இருந்த நிலையில், அவர் டெல்லி சென்றதும், ஓபிஎஸ் ஆதரவாளரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக கொடி பறப்பதற்கு…
தமிழக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டது முதல் தற்போது வரை அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாமல் உள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, அண்ணாமலைக்கு முக்கிய பதவி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அவருக்கு மத்தியில் முக்கிய பதிவு வழங்க இருப்பதாகவும் பரவலாக பேச்சு இருந்தது. இதேபோல, தமிழகத்தில் பாஜக பெரும்பான்மையுடன் காலூன்றுவதற்கான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வியூகத்தால் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், தமிழகத்தில் பாஜகவின் கொடி பறப்பதற்காக தனது கூட்டணிக்கு பலரை சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது பாஜக.
மேலும் படிக்க: ஈரோடு விஜய் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.. மாற்று இடம் தேடும் செங்கோட்டையன்!!