தவெக தலைமையில் புதிய கூட்டணி…டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!
New Alliance Will Forme Under Tvk: 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும், இதற்கான காரணத்தையும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் பிளவு பட்டு கிடக்கின்றன. திமுகவை எதிர்க்கும் கட்சிகள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் திமுகவை வீழ்த்துவது கடினமாக இருக்கும். இதனால், தேசிய ஜனநாயக கூட்டணி 3- ஆவது இடத்துக்கு தள்ளப்படும் நிலை உள்ளது. 2006- ஆம் ஆண்டு தேமுதிகவின் பொதுச் செயலாளர் விஜயகாந்தின் வருகை தமிழக அரசியலில் எவ்வளவு தாக்கத்தை உருவாக்கியதோ, அதேபோல 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் வருகையும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்காக தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் அமமுக இணையும் என்று அர்த்தம் கிடையாது.
அமமுகவுடன் கூட்டணி குறித்து சில கட்சிகள் பேச்சு
அமமுக எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறதோ, அந்தக் கூட்டணி தான் அமோக வெற்றி பெறும். அமமுக கட்சியை தவிர்த்து விட்டு எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. 2026 சட்டமன்ற தேர்தலுக்காக எங்களது கட்சியை பலப்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் அமமுக தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறது. நாங்கள் எந்தக் கூட்டணிக்கு செல்ல போகிறோம் என்பது குறித்து முடிவு எடுக்கவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு முன்பு எங்களது நிலைபாட்டை அறிவிப்போம். எங்களோடு சில கட்சிகள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்கின்றன.
மேலும் படிக்க: மாபெரும் போராட்டம்.. திமுகவுக்கு நோ.. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அன்புமணி பேச்சு




ஆளும் அரசுக்கு சரியான போட்டி தவெக
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தலைமையில் சரியான கூட்டணி அமையும் பட்சத்தில் ஆளும் அரசுக்கு சரியான போட்டியாக இருக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவதற்காக கடந்த 2021, 2024, 2026 தேர்தல்களில் மத்திய உள்துறை அமைச்சர் முயற்சி செய்து வருகிறார். இது தவறான அணுகுமுறை என்று எடுத்துக் கொள்ள முடியாது. அதிமுகவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை தான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்துக்காட்டி உள்ளார். அமமுகவுடன் கூட்டணி அமையும் பட்சத்தில் ஆட்சியில் பங்கு குறித்து பேசி முடிவு எடுப்போம்.
தவெக தலைமையில் புதிய கூட்டணி
என்னிடம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போனில் பேசுகையில், நீங்கள் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என்று கூறுவார். அப்படி இருக்கும் நிலையில், என்னை தூண்டி விட்டு கூட்டணியில் இருந்து வெளியேற்றியதாக கூறுவது தவறாகும். தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய கூட்டணி உருவாக வாய்ப்புள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம்…உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!